சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் யானை உயிரிழப்பு

elephant
Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்தில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி முதல் உடல்நலக்குறைவுடன் காணப்பட்ட 17 வயது ஒற்றை ஆண் யானை, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

கூத்தாமண்டி வன எல்லையை ஒட்டி இருந்த இந்த யானை, சோர்வான நிலையில் சுற்றித்திரிந்ததை கண்ட வனத்துறையினர், வனச்சரகர் மனோஜ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். யானையை வனப்பகுதிக்குள் மீண்டும் செலுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும், அதன் உடல்நிலை காரணமாக அது அசைவின்றி அப்பகுதியில் இருந்தது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில், யானைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. வனத்துறை மருத்துவர் டாக்டர் சுகுமார் தலைமையிலான குழுவினர், தர்பூசணி மற்றும் வாழைப்பழங்களில் ஆன்டிபயாடிக், வலிநிவாரணி, குடற்புழு நீக்கி மற்றும் கல்லீரல் புத்துணர்ச்சி மாத்திரைகள் சேர்த்து வழங்கி வந்தனர்.

மொத்தம் ஏழு நாட்களுக்கு மேலாக வனத்துறை மற்றும் மருத்துவக் குழுவினர் இந்த யானையை கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், தொடர்ந்து தாழ்ந்த உடல்நிலை காரணமாக, இன்று காலையில் அந்த யானை உயிரிழந்தது.

உடனடியாக, மருத்துவர் சுகுமார் தலைமையிலான குழுவினர் யானையின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்தினர். வனத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இறுதி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.