கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியம், பேரூர் செட்டிப்பாளையம் கிராம ஊராட்சி, ஜெகநாதன் நகரில் சிறுதுளி அமைப்பு மற்றும் ஜீ.எஸ் அறக்கட்டளை இணைந்து மியவாக்கி முறையில் 1000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் ஜீ.எஸ் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மோகன், சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், பேரூர் செட்டிபாளையம் கிராம ஊராட்சி தலைவர் சாந்தி பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், சி.எம்.எஸ் அறிவியல் & வணிகவியல் கல்லூரி மற்றும் எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து 105 மாணவர்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறுதுளி அமைப்பு, நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை செய்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகளை கோயம்புத்தூர் மற்றும் பிற மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.
இதற்கு முன், 2022ஆம் ஆண்டில் ஜீ.எஸ் அறக்கட்டளை சிறுதுளியுடன் இணைந்து கோவை மாவட்டம் பீடம்பள்ளியில் சிவோக வனம்’, ‘சுவாமி தயானந்தா சரஸ்வதி வேதாந்த வனம்’ ஆகிய பெயர்களில் தலா 1000 மரக்கன்றுகளையும், மத்துவராயபுரத்தில் ‘கருடவனம்’ என்ற பெயரில் 1000 மரக்கன்றுகளையும் நட்டு பராமரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நான்காவது திட்டமாக ‘தயானந்த சரசுவதி பஞ்சபூத ஸ்வரூப வனம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்துடன் சேர்த்து, சிறுதுளி அமைப்பு இதுவரை 8,50,000-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பராமரித்து வருகிறது. இதன் மூலம் வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமான கோயம்புத்தூரின் பசுமைப் பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற திட்டங்கள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் உதவுகின்றன.
Leave a Reply