சித்தூரில்​ கோவை மாணவர்களுக்கு ஏற்பட்ட துயரம்

Spread the love
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், சித்தூருக்கு சுற்றுலா சென்ற 10க்கும் மேற்பட்ட கோவை தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள், வார இறுதியை மகிழ்ச்சியாகக் கழிக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இந்த பயணம், துயரமாக மாறியது.

இன்று பிற்பகல், சித்தூரில் உள்ள ஆற்றில் மாணவர்கள் குளித்து கொண்டிருந்தபோது, திடீரென உருவான சுழலில் அருண் என்ற மாணவர் சிக்கினார். அவரை மீட்க முயன்ற கௌதம்ஸ்ரீ என்ற மற்றொரு மாணவரும் அதே சுழலில் இழுக்கப்பட்டார். சில நொடிகளிலேயே இருவரும் நீரில் மறைந்தனர்.

உடன் இருந்த நண்பர்கள் உடனடியாக கிராம மக்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படையினர், தீவிரமாக தேடுதல் பணியை மேற்கொண்டனர். இதில் கௌதம்ஸ்ரீயின் உடல் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. அருணை தேடும் பணி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சமூக வலைதளங்களில் காணப்படும் “சுற்றுலா சிறப்பு இடங்கள்” பதிவுகளால் ஊக்கமடைந்து, ஆறு, குளம், மலை போன்ற இடங்களுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் செல்வது அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக பல உயிரிழப்புகள் நிகழ்கின்றன. சித்தூரில் நடந்த இந்தச் சம்பவமும் அதற்கு ஒரு வேதனையான உதாரணமாக உள்ளது.

பாலக்காடு போலீசார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.