2016 ஆம் ஆண்டு வர்தா புயலின்போது சென்னையில் 6 லட்சம் மரங்கள் சாய்ந்த நிலையில் பாதித்த பகுதிகள் போர்க்கால அடிப்படையில் இரண்டு நாட்களில் சீரமைக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கை யில், “கடந்த 2016 ஆம் ஆண்டு வர்தா புயலின் போது சென்னையில் 6 லட்சம் மரங்கள் சாய்ந்த நிலையில், புயலினால் பாதிக்கப்பட்டப் பகுதிகள் போர்க்கால அடிப்படையில் இரண்டு நாட்களில் சீரமைக்கப்பட்டது. 25 ஆயிரம் மின்கம்பங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்த போதிலும் இரண்டே நாள்களில் சீரமைக்கப்பட்டன. சமூக வலைத்தளங்களை முடக்கும் நோக்கில் செயல் பட்டு மின் சாரத்தை திமுக அரசு வழங்கவில்லை.
இந்த திமுக ஆட்சியாளர்களின் இயலாமையையும், நீர் மேலாண்மையில் அடைந் துள்ள தோல்வியையும் மறைப்பதற்காக, முந்தைய அதிமுக அரசு மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது.
சென்னை மாநகர மேயராக இரு முறையும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் மற்றும் துணை முதலமைச்சராகவும் மு.க.ஸ்டாலின் இருந் தபோது என்ன செய்தார்?
சிங்காரச் சென்னையை உருவாக்குகிறோம் என்று கூறி, வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு சாதித்தது என்ன ? என்றும் மக்களின் வரிப் பணத்தை வீணடித்ததுதான் மிச்சம் என்றும், மக்கள் இன்றுவரை குற்றம் சாட்டுகின்றனர்.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஐந்து ஆண்டுகள் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது, வெட்டி முறித்த திட்டங்களைப் பற்றிக் கூறாமல், மக்கள் அனைத்தையும் மறந்துவிட்டார்கள் என்ற எண்ணத்தில் எங்கள் மீது சேற்றை வாரி இறைக்கப் பார்க்கிறார்கள்.
அம்மாவின் ஆட்சியிலும், எங்கள் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் தலைமையிலான அம்மாவின் அரசிலும், சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உள்ளாட்சித் துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
சென்னையில் மழைநீர் வெள்ளம் நிரந்தரத் தீர்வுக்காக அடையாறு பேசின், கோவலம் பேசின் மற்றும் கொசஸ்தலை ஆறு பேசின் ஆகிய மூன்று பெரிய திட்டங்களை ஐந்தாண்டுகளுக்குள் முடிக்கக் கூடிய வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டன.
இதன்மூலம், சென்னையில் உள்ள சுமார் 2,400 கி.மீ. நீளமுள்ள வடிநீர் கால்வாய்களை இணைக்கும் திட்டம், ஜெய்கா (இஜர்மன் நாட்டு நிதி நிறுவனம்) மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களின் மூலம், நிதி ஆதாரங்களைத் திரட்டி பணிகள் தொடங்கப்பட்டன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிங்காரச் சென்னையை உருவாக்குகிறோம் என்று வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து சாதித்தது என்ன?

Leave a Reply