சாலை அமைக்க ரூ.32 கோடி மதிப்புள்ள இடத்தை தானமாக வழங்கிய குடும்பத்தினர்

Spread the love

பொள்ளாச்சியில் சாலை அமைப்பதற்காக ரூ.32 கோடி மதிப்புள்ள 80 சென்ட் இடத்தை ஒரு குடும்பத்தினர் நகராட்சிக்கு தானமாக வழங்கியுள்ளனர்.
கோவையை அடுத்த பொள்ளாச்சியில் பல்லடம் சாலை மற்றும் உடுமலை சாலையை இணைக்கும் வகையில் திட்ட சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நகராட்சி சார்பில் கடந்த 2009-ல் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. இணைப்பு சாலை அமையும் வழியில் சாந்தா ஜெயராமன் என்பவரது குடும்பத்துக்கு சொந்தமாக 80 சென்ட் இடம் உள்ளது. இந்நிலையில், சாந்தா ஜெயராமன் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொள்ளாச்சி நகர மக்களின் நலன் கருதி 66 அடி அகலத்தில் சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் இணைப்பு சாலை முழுமை பெற சாந்தா ஜெயராமன் குடும்பத்தினர் இடம் வழங்க வேண்டுமென நகராட்சி ஆணையர் கணேசன் தலைமையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
நிலத்தை தானமாக வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. சாந்தா ஜெயராமன் பங்கேற்று, நிலத்தை தானமாக வழங்குவதற்கான ஆவணங்களை நகராட்சி ஆணையர் கணேசனிடம் ஒப்படைத்தார்.
சாந்தா ஜெயராமன் கூறும்போது, “பொள்ளாச்சி நகரில் பல்லடம் சாலையில் எங்கள் குடும்ப சொத்தாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் எனது பங்கு மற்றும் எனது மகன், மகள் ஆகியோரது பங்காக கிடைத்த 80 சென்ட் நிலத்தை, பொள்ளாச்சி நகராட்சிக்கு தானமாக வழங்கி உள்ளேன். இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.32 கோடி. சாலை அமைக்க மகிழ்ச்சியுடன் கொடுக்கிறேன்” என்றார்.