,

சாய்பாபா காலனி: மேம் பால நீலத்தை அதிகரிக்க கோரிக்கை

vadakovai
Spread the love

நாட்டில் சாலை போக்குவரத்து கட்டமைப்புக்கள் மிக மிக அவசியம் மற்றும் அத்தியாவசியமாகும்.
அதுவும் தற்போதைய வேகமாக, வளர்ச்சியடைந்த கால காலத்தில், நவீனமான சாலைகளை உருவாக்குவதும் அனைவருக்கும் அத்தியாவசிய தேவைகளில் முக்கிய ஒன்றாகும். இதனால் மிக விரைவாக பயணிக்க முடியும்.
கோவை மாவட்டத்தில் இயந்திர உற்பத்தி தொழில்சாலை, பின்னலாடை, வெட் கிரைண்டர் உற்பத்தி, உள்ளிட்ட அனைத்து தொழில் வளர்ச்சி,ரயில்வே, விமானம், சாலை போக்குவரத்துக்கள் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 15-க்கும் மேம்பாலங்கள் கடந்த 10 ஆண்டு களுக்குள் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
முதல் மேம்பாலம்
கோவையில் அமைந்துள்ள முதல் மேம்பாலமான அவிநாசி சாலை மேம் பாலம் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்பு கலைஞர் மு. கருணாநிதியின் ஆட்சியின் போது,1974-ம் ஆண்டில் அவிநாசி சாலை மேம்பாலம் திறக்கப்பட்டது.
தமிழக தலைநகர் சென்னையில் கட்டப்பட்ட அண்ணா மேம்பாலத்திற்கு பிறகு, தமிழகத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் கோவை அவிநாசி சாலை மேம்பாலம் ஆகும். வட்ட வடிவிலான இந்த மேம்பாலம் இந்தியாவின் முதல் தர மேம்பாலமாக விளங்கி வருகிறது.
தற்போது கோவை மாவட்டத்தில் 15 -திற்கும் அதிகமான மேம்பாலங்களை அரசு கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் எடிப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி பணிகளை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
கோரிக்கை
கோவை மாநகரின் சாய்பாபா காலனி முக்கிய பகுதியாக விளங்கி வருகிறது. கே.கே.புதூர், அழகேசன் சாலை உள்ளிட்ட பகுதிகள் மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் சங்கமிக்கும் இடமாகும்.
துடியலூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, மைசூர் செல்லும் பயணிகள் இச்சாலையை பிரதானமாக பயன்படுத்துகின்றனர்.
மேலும் கல்லூரி, பள்ளிகள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. அண்ணா, எம்ஜிஆர் தினசரி மார்க்கெட்டுகள் இங்கு உள்ளது. இவர்கள் அனைவரும் சாய்பாபா காலனி பகுதியை பயன்படுத்துவதால், கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு இப்பகுதி பொது மக்கள்,பொதுநல அமைப்புகள், சமுதாய அமைப்புகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் சாய்பாபா காலனியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்து கடந்த 2022 -ம் ஆண்டு நான்கு வழி சாலை மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டடு முதல் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.71 கோடி மதிப்பீட்டில் 1.02 கிலோமீட்டர் தூரத்திற்கு மேட்டுப்பாளையம் சாலை கங்கா மருத்துவமனை முதல் சாய்பாபா கோயில் பேருந்து நிலையம் வரை மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திட்டமிடப் பட்டுள்ளமேம்பால கட்டுமான பணிகளை, சற்று தூரம் சீரமைப்பு செய்து தற்போதே கட்டினால் எதிர்கால போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இருக்கும் என
அப்பகுதியினை சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி குடியிருப்பு வாசியும், கோவை மாநகர் மாவட்ட அதிமுக இளைஞரணி செயலாளருமான பப்பையா ராஜேஷ் கூறுகையில், சாய்பாபா காலனி உள்ளிட்ட மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ,புதிய மேம்பாலம் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுள்ளதை வரவேற்கிறோம். இது இப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
மேட்டுப்பாளையம் டிவிஎஸ் போக்குவரத்து சிக்னல் அருகே இருந்து மேம்பால பணிகளை தொடங்க வேண்டும் என்பதே தற்போது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போது 1.02 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதனை மாற்றி 1.600 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாற்றி சங்கனூர் பள்ளம் அருகே பாலம் நிறைவடையும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.
இதனால் பாரதி பார்க் ரோடு, அழகேசன் சாலை, அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், எரு கம்பெனி ஆகிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல், பயணிகள் எளிதாக கடக்க முடியும். ரூ.71 கோடி திட்டமிடப்பட்டுள்ள இந்த பணிக்கு, மேலும் ரூ. 20 கோடி ஒதுக்கி பணிகளை தொடங்கினால், எதிர்கால போக்குவரத்து நெரிசலை எளிதாக குறைக்க முடியும் என்றார்.
டிசம்பரில் முடியுமா?
அவிநாசி சாலை உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை 10. 01 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆயிரத்து 621.30 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
தற்போது இந்த பாலத்தில் அவிநாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பால பகுதியில் ஏறு தளம் இரு புறங்களிலும் 272 மீட்டர் நீளத்திற்கும் 7 மீட்டர் அகலத்திற்கும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ், கிருஷ்ணம்மாள் கல்லூரி, பி. எஸ். ஜி .கல்லூரி, ஜி .ஆர் .ஜி. பள்ளி,கோவை மருத்துவ மையம் ஆகிய ஐந்து இடங்களில் சுரங்க நடைப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
இது போன்ற பணிகள் அனைத்தும் முடிந்து வரும் டிசம்பர் மாதம் அவிநாசி சாலை புதிய மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற மேம்பாலங்களால் கோவை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.