சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

Spread the love

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி காலை ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது.

அன்று காலை 8.30 மணியளவில், தொழிலாளர்கள் மருந்து கலவை செய்யும் அறையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் அருகிலிருந்த 8 அறைகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. அந்த நேரத்தில் ஆலையில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

விபத்து ஏற்பட்ட உடனேயே, சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த கோர விபத்தில், 9 தொழிலாளர்கள் உடல் கருகி, சிதறி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகுராஜா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

விபத்துக்கான காரணம் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.