தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020-இல் காவல்துறையினர் தாக்கியதனால் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் சம்பவம் தொடர்பான வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் முதல் குற்றவாளி மற்றும் காவல் ஆய்வாளரான ஸ்ரீதர், தற்போது அப்ரூவராக (Approver) மாறுவதற்குத் தயார் என நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “உண்மையை வெளிப்படுத்த விரும்புகிறேன்; தந்தை மகன் குடும்பத்திற்கு நீதி கிடைக்க என் மனசாட்சியின் கட்டாயத்தால் இந்த முடிவை எடுத்துள்ளேன். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் செய்த குற்றங்களை கூற தயாராக உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
இத்தகவலின் அடிப்படையில், வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ.க்கு பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவால் வழக்கு விசாரணையில் வேகமும், வழக்கின் தீர்விலும் முக்கிய முன்னேற்றமும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020 ஜூன் 22ஆம் தேதி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அப்பகுதி கடை உரிமையாளரான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் கடுமையாக சித்திரவதைக்குள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இருவரும் பின்னர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலை ஏற்படுத்தியது.
தொடக்கத்தில் CBCID விசாரணை மேற்கொண்ட நிலையில், பின்னர் இந்தியாவின் குற்றப்புலனாய்வுத் துறை (CBI) விசாரணை ஏற்கும் வகையில் மத்திய அரசு அறிவித்தது. இதுவரை 9 காவலர்கள் கைது செய்யப்பட்டு, 105 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. ஆனால், உயர் நீதிமன்றம் 2021-இல் வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டபோதும், சி.பி.ஐ. கால அவகாசம் கோரியதாலேயே வழக்கு தாமதமடைந்தது.
இந்த நிலையில், பிரதான குற்றவாளி அப்ரூவராக மாறும் முடிவு வழக்கின் போக்கை முழுமையாக மாற்றும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply