கிரிக்கெட் கடவுளாக கருதப்படும் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூனுக்கும் மும்பை தொழிலதிபர் மகளுடன் திருமணம் நடக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இவருக்கு அர்ஜூன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உண்டு. பந்துவீச்சாளரான அர்ஜூனால் தந்தை போல கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியவில்லை. ஐ.பி.எல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக அர்ஜூன் தற்போது விளையாடி வருகிறார். 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி அவரை 30 லட்ச ரூபாய்க்கு மீண்டும் ஏலத்தில் எடுத்தது. ஆனால், இந்த சீசனில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அர்ஜூனுக்கும் மும்பை தொழிலதிபரும் கிராவிஸ் குரூப்பின் தலைவருமான ரவி கையின் பேத்தி சானியா சந்தோக்கிற்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. நிச்சயதார்த்தத்தில் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே பங்கேற்றுள்ளனர். எனினும், இது தொடர்பாக இரு குடும்பத்தினரும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடவில்லை.
சானியா பெரும்பாலும் பொது இடங்களில் தலை காட்டுவதில்லை. விலங்குகள் மீது மிகுந்த அன்பு கொண்ட சானியா சந்தோக், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘மிஸ்டர். பாவ்ஸ் பெட் ஸ்பா & ஸ்டோர் எல்எல்பி’ என்ற நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பங்குதாரராக உள்ளார். இது செல்லப் பிராணிகளுக்கான ஒரு ஸ்பா மற்றும் ஸ்டோர் ஆகும். சானியா சந்தோக் குடும்பத்தினர் ஹோட்டல், உணவு, ஐஸ்கிரீம் தயாரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது. புகழ்பெற்ற இன்டர்காண்டினென்டல் ஹோட்டல் மற்றும் புரூக்ளின் கிரீமரி என்ற பிரபலமான ஐஸ்கிரீம் பிராண்ட் ஆகியவை சானியாவின் குடும்பத்துக்கு சொந்தமானவை.
அர்ஜூனும் சானியாவும் இளம் வயது முதல் நெருங்கிய நண்பர்கள். அர்ஜூனின் சகோதரி சாராவுடனும் சானியாவுக்கு நெருங்கிய நட்பு உண்டு. பல்வேறு திருமணங்களில் சாராவும் சானியாவும் சேர்ந்தே பங்கேற்பது உண்டு.



Leave a Reply