எர்ணாகுளம் – பெங்களூர் இடையே புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் அதிவேக ரயில் சேவை, இன்று முதல் இயக்கம் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, வீடியோகான் மூலம் இச்சேவைக்கு துவக்கமிட்டார். இதையடுத்து, எர்ணாகுளத்தில் இருந்து பயணம் தொடங்கிய சிறப்பு ரயில், கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்தடைந்தது.
கோயம்புத்தூரில் வந்தே பாரத் ரயில் வந்தடைந்ததை முன்னிட்டு, ரயில் நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ரயில் வந்து நின்றவுடன், பயணிகள், பொதுமக்கள், தொழில்துறை பிரதிநிதிகள், மாணவர்கள், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கைதட்டலுடன் வரவேற்றனர். சிலர் ரயிலின் உள்ளமைப்பு, இருக்கை வசதி, நவீன இயக்க தொழில்நுட்பங்களை நேரில் பார்த்து புகைப்படமும் எடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாநகர மேயர் தி. ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், சேலம் கோட்டை ரயில்வே மண்டல மேலாளர் பண்ணா லால், கூடுதல் மேலாளர் சரவணன், பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், வசந்தராஜன், ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், எர்ணாகுளம்–கோவை–பெங்களூரு இடையிலான பயண நேரம் குறைவதோடு, பயணத்தரமும் மேம்படுகிறது என்று ரயில்வே வட்டாரம் தெரிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக உள்துறை வசதிகள் மற்றும் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.



Leave a Reply