கோவை மத்திய ரயில் நிலையம் மற்றும் வடகோவை ரயில் நிலையம் ஆகிய இரண்டையும் மேம்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால், கோவை எம்பி கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட ரயில்வே துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் ரயில் நிலையத்தில் நேரடி ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது, போக்குவரத்து நெரிசலை குறைப்பது, அடிப்படை வசதிகளை அதிகப்படுத்துவது, கூடுதல் ரயில்கள் இயக்குவது போன்ற அம்சங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்பி கணபதி ராஜ்குமார், கோவையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் ரயில் சேவை மற்றும் கோவை-பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்கம் போன்றவை கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கோவை-சேலம் மெமு ரயில்கள், பொள்ளாச்சி-கோவை இடையேயான ரயில்கள், திருச்சி வழியாக வேளாங்கண்ணி செல்லும் ரயில்கள் ஆகியவற்றிற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அடிப்படை வசதிகளில் கழிவறைகள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் ஆகியவை கூடுதலாக அமைக்க வேண்டும் என்பதையும் மக்களின் சார்பில் முன்வைத்ததாகவும் கூறினார். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சில ரயில்களை வடகோவை மற்றும் போத்தனூர் நிலையங்களுக்கு மாற்றுவதற்கான ஆலோசனைகளும் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், டைடல் பார்க் அருகிலும் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரயில்வே போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், காவலர்களுக்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Leave a Reply