கோவை மெட்ரோ அனுமதி மறுப்பை கண்டித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம்

Spread the love

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததைக் கண்டித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசையும், அதைப் பற்றி கேள்வி கூட கேட்காத அதிமுகவையும் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது” என்றார்.

அவர் தொடர்ந்து, “மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான அறிக்கையை தமிழக அரசு 15 மாதங்களுக்கு முன்பே மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. உலக வங்கி நிறுவன அதிகாரிகளும் பலமுறை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் வெறும் ஐந்து மாதங்களுக்குள் அனுமதி வழங்கப்படுகின்ற நிலையில், தமிழகத்துக்கு மட்டும் அற்ப காரணங்களை காட்டி நிராகரித்து வருகின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.

மேலும், “உயர்த்திய வரியை பின்னர் குறைத்து வைத்து அதற்கு விழா எடுத்துக்கொள்ளும் ஒரே கட்சி பாஜக தான்” என்று விமர்சித்த அவர், தமிழக வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு அரசியல் காரணங்களால் தாமதப்படுத்துவதாகவும் கூறினார்.