கோவை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு -6.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கம்

Spread the love

கோவை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பவன்குமார் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, எஸ்ஐஆர் (SIR) பணிகளுக்கு முன், கடந்த 27.10.2025 நிலவரப்படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள் பதிவாகியிருந்தனர். எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 6,50,590 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 25,74,608 ஆக குறைந்துள்ளது.

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம் குறித்து விளக்கமளித்த அவர், இறந்தவர்கள் 1,19,489 பேர், முகவரியில் இல்லாதவர்கள் 1,08,360 பேர், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் 3,99,159 பேர், இரட்டை பதிவுகள் 23,202 பேர் மற்றும் இதர காரணங்களால் 380 பேர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களை பொதுமக்கள் கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றும், பெயர் சேர்த்தல், நீக்கம் அல்லது திருத்தம் தொடர்பான மனுக்களை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பவன்குமார் கேட்டுக்கொண்டார்.