கோவை மாவட்ட கிராம ஊராட்சி அமைப்புகளை கலைக்க முடிவெடுத்த திமுக அரசுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோவை மாவட்டத்தில் பல கிராம ஊராட்சிகள் அருகிலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க முடிவெடுத்து அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளை பேருராட்சி, நகராட்சி, மாநகராட்சியுடன் இணைப்பதால், கிராம ஊராட்சிக்கு கிடைக்கும் மத்திய அரசின் திட்டங்கள் நிறுத்தப்படும்.
இதனால், நிதி இழப்பு ஏற்படும். அதோடு, கிராமப்புற மக்களுக்கு கிடைத்து வந்த 100 நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டமும் இழக்க நேரிடும்.
கோவை மாநகராட்சியுடன் நீலம்பூர், மயிலம்பட்டி, சின்னிய ம்பாளையம் குருடம்பாளையம், சோமையம்பாளையம், அசோகபுரம் ,கீரநத்தம், மலுமிச்சம்பட்டி, சீரபாளையம் என 9 ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது. கலங்கல் , காங்கேயம்பாளையம் ஊராட்சிகள் சூலூர் பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. பேரூர், செட்டிப்பாளையம், பட்டணம், கணியூர் , அரசூர் ஆகிய நான்கு ஊராட்சிகளும் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. இப்படி, கோவை மாவட்டத்தில் 15 கிராம ஊராட்சிகள் கலைக்கப்படுகிறது.
பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கு முடிவை எடுத்துள்ள இந்த அரசை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த சட்ட மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போதே , அதிமுக கடுமையாக எதிர்த்தது. இந்த முடிவை கை விட வேண்டுமென்று வலியுறுத்தினோம். கடுமையான நிதி நெருக்கடியால் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் ஆயிரம் ரொக்கப்பணத்தையும் வழங்க முடியாது என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.
திமுக அரசின் நிர்வாக கேட்டால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு தொடங்கி வைத்த பணிகளை மட்டுமே இந்த அரசு திறந்து வைத்து வருகிறது.
கடந்த 42 மாதங்களாக கோவை மாவட்டத்தில் , மாநகராட்சி பகுதியில் எந்தவித வளர்ச்சி பணிகளும் திமுக அரசால் மேற்கொள்ளப்படவில்லை. சேதமடைந்த சாலைகளை கூட சீரமைக்காததால், மக்கள் சொல்ல முடியாத துயரத்துக்குள்ளாகியுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் குடிநீர் வசதி, சாலை வசதி ஏற்படுத்த அதிமுக அரசால் ரூ.150 கோடிக்கு திட்டம் இயற்றப்பட்டது. இதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த திட்டத்தை கோவை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. மக்கள் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நிதியில்லாமல் கோவை மாநகராட்சி திணறுகிறது.
இந்த நிலையில், கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்தினால் மத்திய அரசின் உதவி கிடைக்காமல் போகும். அப்படியிருக்கையில், முக்கிய அடிப்படை வசதிகளை எப்படி இந்த அரசால் மேற்கொள்ள முடியும். கிராம ஊராட்சிகளை நகர்ப்புற ஊராட்சிகளுடன் இணைப்படுவதையும், தரம் உயர்த்துவதையும் கிராம மக்கள் விரும்பவில்லை.
எனவே, திமுக அரசு கிராம ஊராட்சிகளை நகர்ப்புற ஊராட்சிகளுடன் இணைக்கும் திட்டத்தை உடனடியாக கை விட வேண்டுமென அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோர்.” என்றுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட கிராம ஊராட்சி அமைப்புகளை கலைப்பதா? முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம்

Leave a Reply