கோவை மாநகரில் ரோந்து காவலர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிரத்தியேக எண்கள்

Spread the love

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிரத்தியேக தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர், காவலர்களுக்கு கைப்பேசி மற்றும் சிம் கார்டுகளை வழங்கியதுடன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
கோவை மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் ரோந்து காவலர்கள் மூன்று முறைகளில் சுழற்சி அடிப்படையில் பணியாற்றும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது கூடுதலாக 19 பீட் பகுதிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 52 பீட் காவலர்கள் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர். இப்போது அவர்களுக்கு பிரத்தியேக எண்களும் ஸ்மார்ட்போன்களும் வழங்கப்பட்டுள்ளன.

அவசர சூழ்நிலையில் பொதுமக்கள் 100 என்ற எண்ணிற்கு அழைத்தால், அது மாநில கட்டுப்பாட்டு அறைக்கு சென்றடையும். அங்கிருந்து உடனடியாக சம்பவம் தொடர்பான தகவல், அந்தப் பகுதியில் பணியில் உள்ள ரோந்து காவலர்களின் செல்போன்களுக்கு மாற்றி இணைக்கப்படும். இதனால் சம்பவ இடத்திற்கு காவலர்கள் விரைந்து சென்று தேவையான உதவிகளை வழங்குவார்கள். மேலும், பொதுமக்கள் க்யூ ஆர் கோடு மூலம் தங்கள் பகுதிக்கான ரோந்து காவலர்களின் எண்களை அறிந்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் குறித்து அவர் தெரிவித்ததாவது: “கோவை மாநகரில் வருடந்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கூடிவருகின்றன. இதனால் நெரிசல் அதிகரித்து வருகிறது. இருந்தாலும் போக்குவரத்தை சீராக்க பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக சாய்பாபா காலனி அருகே மேம்பாலம் பணிகள் முடிவடைந்தவுடன் அந்தப் பகுதியில் நெரிசல் குறையும். இதேபோல் நகரின் பல்வேறு இடங்களில் நெரிசலை குறைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்றார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பிரச்சனைக்குரிய இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்த ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அதிவிரைவு படை மற்றும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மொத்தம் 1,800 காவலர்கள் விநாயகர் சதுர்த்திக்காக பணியமர்த்தப்படுவதாகவும், சிலைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார்.

மேலும், மாநகரில் 2,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் மாநகராட்சியுடன் இணைந்து நடைபெற்று வருகின்றன. இதற்கான ஃபைபர் ஆப்டிக் இணைப்பும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தனியார் மற்றும் பொதுமக்கள் நிறுவியுள்ள கேமராக்களையும் ஒருங்கிணைத்து, மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படும். எங்கு கேபிள் துண்டிப்பு அல்லது சேதம் ஏற்பட்டாலும் உடனடியாக சீரமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதேபோல், “ரோந்து காவலர்களுக்கு செல்போன்கள் வழங்குவதால் வேலைப்பளு அதிகரிக்கும் என சிலர் கூறினாலும், உண்மையில் அவர்கள் சுழற்சி முறையில் பணிபுரிவதால் கூடுதல் பணி சுமை ஏற்படாது. வயதானவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது,” என்றும் ஆணையாளர் தெளிவுபடுத்தினார்.