இந்த நிலையில், மாமன்றக் கூட்டத்திற்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் உள்ளிட்டோர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். சாலைகள் சீரமைக்கப்படாததை கண்டித்து வாசகங்கள் எழுதப்பட்ட பேனர்களை ஏந்தி, திமுக நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“நேற்று நடைபெற வேண்டிய சாதாரண மாமன்றக் கூட்டத்தை இன்று அவசரக் கூட்டமாக மாற்றி உள்ளனர். அவசரக் கூட்டம் என்றால் முக்கியமான ஒன்று அல்லது இரண்டு தீர்மானங்கள் மட்டுமே விவாதிக்கப்பட வேண்டும். ஆனால், 105-க்கும் மேற்பட்ட தீர்மானங்களை கொண்டு வந்துள்ளனர். திமுக உறுப்பினர்களே அவற்றை முழுமையாகப் பார்த்திருக்க மாட்டார்கள்,” என்றார்.
மேலும் அவர், வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து செட்டிபாளையம், போத்தனூர், ஆத்துப்பாலம், குனியமுத்தூர், கோவை புதூர் வரை கடும் துர்நாற்றம் வீசுவதாக குற்றம்சாட்டினார். “மழைக்காலம் மட்டுமின்றி, இப்போது சாதாரணமாக காற்று வீசினாலே சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்நல பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இதைக் கவனிக்காமல் போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருக்கிறது,” என விமர்சித்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக மாநகராட்சி முழுவதும் செம்மொழிப் பூங்காவிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், வருமானம் வரும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாகவும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “நடைபயிற்சிக்கு கூட பணம் இல்லாத நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்ட குளங்கள் இன்று ஆகாயத் தாமரைகள் படர்ந்து சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடங்களாக மாறி வருகின்றன. அதிமுக ஆட்சிக் காலத்தில் அழகுபடுத்தப்பட்ட மாநகராட்சியை, திமுக திட்டமிட்டு குப்பைமேடாக மாற்றி வருகிறது,” என்றார்.
மேலும், தொழில் நகரமான கோவையில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் வெளிநாட்டில் இருந்து தொழில் தொடங்க வருவோரும் கூட இங்கு வரத் தயங்குவதாக தெரிவித்தார். “கிழிந்த சட்டைக்கு ஓட்டு போட்டது போல் சாலைகள் உள்ளன. அனைத்து சாலைகளிலும் தற்காலிக ஒட்டுப் பணிகள் மட்டுமே செய்யப்படுகின்றன. இந்நிலையில் வெளிநாட்டு முதலீடுகள் எப்படி வரும்?” என கேள்வி எழுப்பினார்.



Leave a Reply