,

கோவை மாணவி கூட்டு பாலியல் சம்பவத்திற்கு பாஜக கண்டனம் – மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Spread the love

கோவையில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தங்களது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என கருதப்பட்ட கோவையில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெண்களை பாதுகாக்கும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தும் முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை,” எனக் கூறினார்.

மேலும், போதைப்பொருள், குறிப்பாக கஞ்சா பரவல் இச்சம்பவங்களுக்கு முக்கிய காரணம் எனவும், கோவையில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்த நிலையில் காவல்துறை அதை கட்டுப்படுத்த இயலாமல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பாலியல் குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டம் மற்றும் தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதேபோல், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “சட்டப்பேரவையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசினாலும் அரசு மனப்பூர்வமாக பதில் அளிக்கவில்லை. அரசு பாதுகாப்பை வழங்காது இருந்தால், பெண்களே முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது,” என தெரிவித்தார்.

இச்சம்பவத்தை கண்டித்து திங்கட்கிழமை மாலை கோவையில் பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மேலும் செவ்வாய்க்கிழமை தமிழக முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.