கோவை மாநகராட்சியின் பராமரிப்பில் இயங்கி வரும் ஒரு பொதுக் கழிப்பிடத்தில், தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது அந்த பெயர்கள் அகற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அண்ணா நகரில், சில்வர் ஜூபிலி என்ற பகுதியில் அமைந்துள்ள பொதுக் கழிப்பிடத்தை மையமாகக் கொண்டது. சமீபத்தில் இந்தக் கழிப்பிடம் புதுப்பிக்கப்பட்டு, புதியதாகப் பெயிண்ட் அடிக்கப்பட்டு, பொலிவுடன் காட்சியளிக்கத் தொடங்கியது.
அந்த கழிப்பிடத்தின் முன்பக்கச் சுவரில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணா, மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கக்கன் ஆகியோரின் பெயர்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. இந்த பெயர்கள் இந்தக் கழிப்பிடம் கட்டப்பட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட கழிப்பிடத்தில் மூத்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் விமர்சனத்துக்குரியதாக மாறியது. சமூக வலைதளங்களிலும் இதைப்பற்றிய பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன.
இந்தப் பின்னணியில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆணையர் தலைவர்கள் பெயர்களை கழிப்பிடத்தில் வைத்திருப்பது தவறானது என்றும், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் முடிவெடுத்தனர். அதன் பேரில், நேற்று அந்த தலைவர்களின் பெயர்கள் மட்டும் அகற்றப்பட்டு, இன்று முழுமையாக வண்ணம் பூசப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply