கோவை பூ மார்க்கெட்டில் ஆடை விவகாரம்: பெண்ணிடம் வியாபாரிகள் வாக்குவாதம்

Spread the love

கோவை பூ மார்க்கெட் வளாகத்தில் புதன்கிழமை பூ வாங்க வந்த ஒரு பெண்ணிடம், அவர் அணிந்திருந்த ஆடை குறித்து சில வியாபாரிகள் கருத்து தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

ஸ்லீவ்-லெஸ் உடை அணிந்து தனது நண்பருடன் பூ வாங்க வந்த அந்த பெண்ணிடம், “அரைகுறையாக உடை அணிந்து வரக்கூடாது, கொஞ்சம் நாகரீகமாக உடை அணிந்து வாருங்கள்” என வியாபாரி ஒருவர் அறிவுரை வழங்கியதாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த அந்த பெண், “ஒருவரின் உடை என்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. நான் அணிந்துள்ள ஆடை அரைகுறையானதா?” எனக் கேள்வி எழுப்பினார். பின்னர் அந்த வியாபாரிக்கு ஆதரவாக மேலும் சிலர் வந்து, பூ மார்க்கெட்டில் இவ்வாறான உடை அணிவது அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் எனக் கூறினர்.

இதற்கு எதிராக அந்த பெண் மற்றும் அவரின் நண்பர், “மார்க்கெட்டுக்கு வருவோர் எப்படிப்பட்ட உடை அணிய வேண்டும் என எங்கேனும் விதிமுறை இருக்கிறதா? இருந்தால் பட்டியலிட்டு போர்டில் வெளியிடுங்கள்” என வாதிட்டனர்.

விவாதம் தீவிரமான நிலையில், வியாபாரிகள் குழுவாக சேர்ந்து அந்த பெண்ணிடம் கத்திச் சண்டை போட்டனர். சம்பவத்தை அந்த பெண் மற்றும் அவரது நண்பர் வீடியோவாக பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அந்த பெண், கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளார்.