​​கோவை பீளமேட்டில் டாஸ்மாக் ஊழியர்கள் காத்து இருப்பு போராட்டம்

Spread the love

கோவை பீளமேடு, விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கோவை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில், டாஸ்மாக் தொழில் சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுபான பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது, காலி பாட்டில்களை திரும்பப் பெறுவது ஆகிய பணிகளை இனி தாங்கள் செய்யமாட்டோம் என்றும், இப்பணிகளை நிர்வாகம் நேரடியாக மேற்கொள்ள தனி ஆட்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், மண்டல மேலாளர் அங்கு இல்லாததால் அவர் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள், “2003-ஆம் ஆண்டு டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்ட போது மதுபான விற்பனை மட்டுமே எங்கள் பொறுப்பு என இருந்தது. ஆனால் தற்போது பல்வேறு கூடுதல் பணிகள் எங்களிடம் திணிக்கப்பட்டு பணி சுமை அதிகரித்துள்ளது. குறிப்பாக, பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுதல், காலி பாட்டில்களை வாங்குதல் போன்ற வேலைகள் சுகாதார ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. எச்சில் பாட்டில்களை கையாள்வதால் உடல்நல பாதிப்பும் அதிகரித்து வருகிறது,” எனக் கூறினர்.

அத்துடன், திமுக ஆட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான 159-ஆம் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், இதுவரை ஆட்சியில் வந்தும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.