ஆ.வெ.மாணிக்கவாசகம்
தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கையில் 3-வது தொகுதியாக விளங்கி வருகிறது கோவை.
100 டிகிரி வெயிலைக் காட்டிலும், அரசியல் சூட்டால் கொதி நிலையில் கோவை பாராளுமன்றம் உள்ளது .
அறிவியல் கண்ணோட்டத்துடன், ஆக்கபூர்வமான,
ஆழமான கருத்துக்களை தெரிவித்து வரும் பாஜக தலைவரும்,
அக்கட்சியின் வேட்பாளருமான கே. அண்ணாமலை களத்தில் இருப்பதால் தான் கொதி நிலைக்கு முக்கிய காரணம்.
இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றாகி விட்டது கோவை.
கொங்கு மண்டலத்தில் பெரு நகரமாக உள்ள கோவைக்கு பல அரசியல் வரலாறுகள் அதிகம் உண்டு.
இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் காலம் தொட்டு, இன்று வரை அரசியல் வானில் கோவைக்கு என சிறப்பான இடம் இருந்து வருகிறது.
1952-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சேர்ந்த தி.அ. ராமலிங்கம் செட்டியார் போட்டியின்றி தேர்வானார் .
1957-ம் ஆண்டு தேர்தலில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த பி சுப்பராயனின் மகள் பார்வதி கிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியை தக்க வைத்துக் கொண்டார்.
காங்கிரஸ் சார்பில் 1962 -ல் ராமகிருஷ்ணனும், மார்க்சிய கம்யூனிஸ்ட் சார்பில் கே. ரமணி 1967-லிலும் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றனர்.
தொடர்ந்து
1971 இல் பாலதண்டாயுதன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், மீண்டும் பார்வதி கிருஷ்ணன் 1973,77-ம் ஆண்டுகளில் கோவை மக்களின் பிரதிநிதியாக இருந்தார்.
இரா. மோகன் 1980ல் திமுக சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1984,89,91 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்ந்த சி. கே. குப்புசாமி வெற்றியினை தக்க வைத்துக் கொண்டார்.
திமுக சார்பில் மு. இராமநாதன் 1996- லும்,1998,99 தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் ,பாரதிய ஜனதா கட்சி சார்பில் களம் கண்டு வெற்றியை ஈட்டினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே. சுப்பராயன் 2009-ம் ஆண்டிலும்,மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி. ஆர். நடராஜன் 2009-ம் ஆண்டு தேர்தலிலும், 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.பி. நாகராஜன் ஆகியோரும் வென்றனர் .
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பி. ஆர் .நடராஜன் இரண்டாவது முறையாக வெற்றியை தக்க வைத்துக் கொண்டார்.
21 லட்சம்
கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம் ,சிங்காநல்லூர், சூலூர் ,பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவை பாராளுமன்ற தொகுதியில்
10 லட்சத்து
30 ஆயிரத்து
63 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து
52 ஆயிரத்து 602 பெண் வாக்காளர்களும்,
369 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம்
20 லட்சத்து
83 ஆயிரத்து 34 பேர் உள்ளனர்.
580 வாக்கு மையங்களில் 2 ஆயிரத்து 48 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
திமுக வேட்பாளர்
கோவை தொகுதியில்,
கூட்டணி கட்சி வேட்பாளரே போட்டியிடுவார் என்ற நிலையில்,
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் முன்னாள் மேயரும், கோவை மாநகர திமுக அவைத் தலைவருமான கணபதி ராஜ்குமார் களம் இறக்க விடப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது,கணபதி ராஜ்குமார் வைத்திருந்த விசுவாசமே அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார் என செய்தி கசியவே,
கோவை தொகுதி மிகுந்த பரபரப்பானது.
இதனால் கோவை தொகுதி மீது திமுக கவனம் செலுத்த தொடங்கியது.
1996-ம் ஆண்டு திமுக சார்பில் மு. இராமநாதன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2014-ம் ஆண்டு திமுக போட்டியிட்டு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுகவில் இருந்த போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அழைப்பின் பேரில் திமுகவுக்கு வந்தவர்.
செந்தில் பாலாஜி கோவையின் பொறுப்பு அமைச்சராக இருந்த போது,
அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர்.
செந்தில் பாலாஜி வழக்கில் கைதான பின், கணபதி ராஜ்குமார் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தார்.
அதிமுகவில் இருந்து அவர் வந்ததால், திமுகவினர் அவரை புறக்கணித்தனர்.
அமைதியானவர் என கண்டறியப்பட்ட கணபதி ராஜ்குமார்,
கொங்கு வேளாளர் சமுதாயத்தை சார்ந்தவர்.கணபதி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு, கோவையின் வடக்கு பகுதியில் உள்ள ஊர்களில் உறவினர்கள் அதிகமாக இருப்பதால், கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவு உள்ளது.
கட்சியின் மூத்த நிர்வாகிகளும், அதிமுகவில் இருந்து வந்தவருக்கு சீட்டா? என அதிருப்தியில் இருந்த திமுகவினர், முழு மனசின்றி, தேர்தல் பணிகளில் ஏனோ தான என உள்ளனர்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்
மு. க. ஸ்டாலின் ,அறிவிக்கப்பட்டுள்ள திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க உத்தரவிட்டும்,
வாக்கு சதவீதம் குறையும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்ததால் கோவை மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள் தீவிர களப்பணியில் உள்ளனர்.
தொழில்துறை அமைச்சர் டி. ஆர் .பி. ராஜா தேர்தல் பொறுப்பாளராக இருந்து, பணிகளை வேகப்படுத்தி வருகிறார். மலைவாழ், பழங்குடி இன மக்கள் பகுதிகளுக்கு எல்லாம் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
முதலமைச்சர்
மு. க. ஸ்டாலின் மருமகன் ,சபரீசன் கோவைக்கு வந்து தேர்தல் பணிகளை வேகப்படுத்தி சென்றுள்ளார்.
திணறல்
மேடைப் பேச்சில் பழக்கம் இல்லாத வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆரம்பத்தில், மைக்கை பார்த்தாலே உதறல் எடுக்க ஆரம்பித்தது.
அவரது திணறலை கண்டு, திமுகவினரை கிண்டல் அடித்தனர். பின்பு நன்கு பயிற்சி எடுத்து, தற்போது ஓரளவிற்கு பேசும் நிலைக்கு வந்துள்ளார்.
மேலும் பத்திரிகையாளர்கள் பேட்டிக்கு அணுகினால், நழுவி விடுகிறார்.
தேவையில்லாமல் உளறி கொட்டினால், அது சர்ச்சையாகும் என, உடன் இருக்கும் நிர்வாகிகள் வேட்பாளரை அடுத்த பாயிண்டுக்கு அழைத்து சென்று விடுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் வேட்பாளர் பேட்டி கொடுப்பார் என சமாளிக்கின்றனர்.
கூட்டணி கட்சியான காங்கிரசாரின் ஒத்துழைப்பு முழு அளவில் இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
கூட்டணி கட்சியான இரு கம்யூனிஸ்டுகள் பிரச்சாரத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
மேலும் தங்கள் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கும், கேரளாவில் தேர்தல் வேலைகள் செய்ய கோவை கம்யூனிஸ்டுகள் சென்று விட்டனர்.
விடுதலை சிறுத்தைகள், இஸ்லாமிய அமைப்புகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டோர் தங்களின் கொடிகளுடன் களத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவதை காண முடிகிறது.
முதலமைச்சர்
மு. க. ஸ்டாலின் ,
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகிய இண்டியா கூட்டணி தலைவர்கள்
எல் / டி பைபாஸ் கொச்சி சாலை அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது, கூட்டணியில் உள்ள தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளது.
“கடும் நிதி நெருக்கடியிலும் கோவைக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
தென் மாவட்டங்களுக்கு கோவையில் இருந்து இரவு நேர ரயில், பொள்ளாச்சி இளநீர், தேங்காய்க்கு புவிசார் குறியீடு” கொண்டு வரப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் இக்கூட்டத்தில் உறுதி அளித்தார்.
கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி “இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ,நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பதை தமிழக மக்களே முடிவு செய்யலாம் எனவும், ஸ்டாலினை தவிர வேறு யாரையும் ‘அண்ணன்’ என அழைத்தது இல்லை” எனவும் பேசி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
துடிப்புடன் அதிமுக
அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிங்கை கோவிந்தராஜ் மகன், சிங்கை ராமச்சந்திரன் மிகுந்த துடிப்புடன், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆரம்பத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை வம்பு இழுப்பதையே வாடிக்கையாக இருந்து,தேர்தல் பணிகளில் கவனம் இன்றி இருந்தார்.
அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ். பி. வேலுமணியின் அறிவுரைப்படியும்,அவரின் அதிக பேராதரவு பெற்று நம்பிக்கையுடன் களமாடி வருகிறார்.
கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்ததால், மிகுந்த உற்சாகத்துடன் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர்.
பல தேர்தல் பணிகள் பார்த்த அனுபவம் இருப்பதால், எளிதான முறையில் முழு மூச்சுடன், களம் கண்டு வருகின்றனர்.
மாநகர் மாவட்ட செயலாளரும்,
கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான அம்மன் அர்ச்சுணன்,கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி. ஆர். ஜி. அருண்குமார்,சிங்காநல்லூர் எம்எல்ஏ
கே. ஆர். ஜெயராம்,
சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி, பல்லடம் சட்ட மன்ற உறுப்பினர் எம். எஸ். எம். ஆனந்தன் ஆகியோர் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
தாங்கள் வெற்றி பெற்ற வாக்குகளை பெற்றுத்தர முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி கூறியதுடன், திமுக மீதான அதிருப்தி அதிக அளவில் இருப்பதால், அதிமுக வேட்பாளர் வெற்றிக்கான வியூகங்களை அளித்துள்ளார்.
ஸ்டார் வேட்பாளர்
அனைவராலும் அறியப்பட்ட பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்டார் வேட்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மக்கள் தரிசன யாத்திரை, மேட்டுப்பாளையம் பொதுக்கூட்டம் என இரு முறை பிரதமர் மோடி கோவைக்கு வந்து சென்றதால், பாஜகவினர் வேகமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் ஆண்டுதோறும் 1.26 லட்சம் இளம் பட்டதாரிகள் படித்து வெளியே வருகின்றனர். அவர்களுக்கு கோவையில் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் பெரிய நிறுவனங்கள் கொண்டு வரப்படும் என அண்ணாமலை பிரச்சார கூட்டங்களில் பேசுவது, உள்ளூர் இளைஞர்களை கவர்கிறது.
500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது, சாத்தியமானது என பார்க்கப்படுகிறது.
அண்ணாமலை பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் குழந்தைகள், பெண்கள் அதிக அளவில் கூடுவது,அது தங்களுக்கு வாக்காக மாறும் என பாஜகவினர் திடமாக நம்புகிறார்கள்.
கடந்த கால தேர்தல்களில் இரு முனைப் போட்டிகள் மட்டும் பலமாக இருந்தன. ஆனால் இத்தேர்தலில் முக்கிய கட்சிகளின் மும்முனை போட்டியால் கோவை தொகுதி அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பில் முதன்மையாக விளங்கி வருகிறது.
Leave a Reply