திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் மீது கொள்ளை, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் கோவை மாநகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் ராஜசேகர் தேடப்பட்டு வந்த குற்றவாளியாவார். கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜசேகர் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சீனிவாசன் நகரில் பதுங்கி இருப்பதாக கோவை தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அங்கு சென்ற கோவை மாநகர தனிப்படை உதவி ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் நான்கு போலீசார் ராஜசேகரை பிடிக்க முயன்றனர். அப்போது உதவி ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் முதுநிலைக் காவலர் கண்ணன் ஆகியோரை ராஜசேகர் கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் பாஸ்கர், ராஜசேகரை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இதில் காயம் அடைந்த ராஜசேகர் திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வெட்டு காயம் அடைந்த காவலர்கள் பாஸ்கர் மற்றும் கண்ணன் ஆகியோரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை குற்றவாளி மீது திருச்சியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.



Leave a Reply