கோவை கரும்புகடை பகுதியில் அனைத்து இஸ்லாமிய ஜமாத், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பாக காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை கண்டித்து நேற்று பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி, பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்றனர். பாலஸ்தீன மக்களின் துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் தலை, கை, கால் கட்டுகளுடன், குழந்தைகளின் சடலங்களை சுமக்கும் போல் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் இணைந்தனர்.
இஸ்ரேல் தாக்குதலையும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் பேட்டியளித்த இஸ்லாமிய இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் ஹமீது, “காசா செய்திகளை வெளிப்படுத்தச் சென்ற பத்திரிக்கையாளர்கள் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவ சேவைக்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூட துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்றார்.
மேலும், இஸ்ரேல் பிரதமரை ஹிட்லரை விட கொடூரமானவர் எனவும், அவருக்கு அமெரிக்க அதிபர் துணையாக உள்ளதாகவும், இவர்களுக்கு இந்திய பிரதமர் மோடி ஆதரவளிக்கிறார் எனவும் குற்றம்சாட்டினார். “இரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தும், ஒருமுறையாவது மோடி கண்டனம் தெரிவிக்கவில்லை. பாலஸ்தீன முஸ்லிம்கள் கொல்லப்படுவதை அவர் ரசிக்கிறார் போல் தெரிகிறது,” எனவும் விமர்சித்தார்.
அத்துடன், “இந்தியா உண்மையிலேயே காந்தியின் தேசம் எனில், உடனடியாக இஸ்ரேலுடன் உள்ள உறவைத் துண்டிக்க வேண்டும். இஸ்ரேலிய தூதரகத்தை மூடிவிட்டு தூதரை வெளியேற்ற வேண்டும். இது செய்யப்படாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் விரிவடையும்,” என சுல்தான் ஹமீது எச்சரித்தார்.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால், ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.



Leave a Reply