கோவை : உண்மை காதலை நிரூபித்த காதலர்!

Spread the love

மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் கோவையில் படித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி தன்னுடைய ஆண் நண்பருடன் இரவு நேரத்தில் கோவை விமான நிலையம் பின்புறமுள்ள பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்ததை பார்த்த மூன்று மர்ம நபர்கள் காரின் அருகே வந்து பார்த்துள்ளனர். அப்போது காரில் உள்ளே ஆண் நண்பரும் கல்லூரி மாணவியும் இருந்ததை பார்த்து, வெளிய வர கூறி உள்ளனர்.

குற்றவாளிகள் முதலில் நண்பரை தாக்கினர். பின்னர், மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் மூன்று முக்கிய சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் குற்றவாளிகள் மூன்று பேரும் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கே சென்ற காவல்துறையினரிடம் இருந்து அவர்கள் தப்பிக்க முயன்றபோது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு கருப்பசாமி,காளீஸ்வரன், தவசி ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது கும்பலாக பலாத்காரம் செய்தது உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை பிப்ரவரி 2ம் தேதி தொடங்கியது.
மொத்தம் 72 சாட்சிகள், 111 ஆதாரங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. கல்லூரி மாணவி, மாணவியின் ஆண் நண்பர், மாணவியின் தாய், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலரும் சாட்சியம் அளித்தனர். அதன்பேரில் 21 நாட்களில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது. அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு இறுதி வாதங்கள் முடிந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பளித்தார். இதில், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 7 லட்சமும் ஆண் நண்பருக்கு 2 லட்சமும் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை காதலர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இது குறித்து அரசு வக்கீல் ஜீஷா கூறியதாவது, ”அந்த கல்லூரி மாணவி இந்த கொடுமையான சம்பவத்துக்கு பிறகு, மனதளவில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாவில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மதுரையில், இளங்கலை பட்டம் பெற்ற மாணவி கோவையில் முதுகலை படித்த போதுதான் இத்தகைய கொடூர சம்பவம் நடந்துள்ளது. மாணவிக்கு அவரது காதலர்தான் இந்த தருணத்தில் ஆறுதலாக இருந்துள்ளார். தனது வீட்டிலேயே அறை ஒன்றை பெற்றோர் சம்மதத்துடன் ஒதுக்கி தங்க வைத்துள்ளார். மருத்துவர்கள் மூலமும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்காக, அந்த மாணவி அடிக்கடி மதுரையில் இருந்து கோவைக்கு வர வேண்டியது இருந்தது. அப்போதும், அந்த காதலர்தான் மாணவிக்கு துணையாக இருந்துள்ளார்.. இந்த சூழலில்’ இப்படி நடந்து விட்டதே ‘என்றும் காதலர் வருந்தியுள்ளார். அதோடு , பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்யவும் காதலர் முடிவு செய்துள்ளார். மாணவியும் அந்த சம்பவத்தை மறந்து சகஜமாக வாழ பழகி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்