கோவையில் ஹாக்கி மைதானம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

udhayanidhi stalin
Spread the love
கோவை ஆர்.எஸ்.புரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், 9.67 கோடி ரூபாய் மதிப்பிலான உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, 29 கோடி 99 லட்சம் ரூபாய் மதிப்பிலான 64 திட்டங்களைத் தொடங்கி வைத்த துணை முதலமைச்சர், மேலும் 82 கோடி 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான 132 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

“கோவைக்கு எப்போது வந்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. திராவிட மாடல் அரசு என்பது ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பதற்கு இந்த நிகழ்ச்சி உதாரணம். மக்களின் தேவைகளை அறிந்து, இந்த அரசு தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

முதன்முதலாக முதலமைச்சர் தலைமையில் ‘மகளிர் விடியல் பயணத் திட்டம்’ தொடங்கப்பட்டது. இதன் மூலம் 700 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பயணங்களை மகளிர் பயன்படுத்தியுள்ளனர். மேலும், உயர்கல்வி பயிலும் 3 லட்சம் மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் மாணவர்களுக்கு நிதி உதவி செய்யப்பட்டுள்ளது. 21 லட்சம் மாணவர்கள் காலை சிற்றுண்டி திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.

இவை அனைத்தையும் மிஞ்சி, இந்தியா முழுவதும் பாராட்டைப் பெற்ற ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ செயல்பட்டு வருகிறது. இதில் பங்கேற்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். மகளிர் சுய உதவிக் குழுக்கள் வெற்றிகரமாக செயல்பட்டு, பணிபுரியும் பெண்கள் இன்று தொழில்முனைவோர்களாக உயர்ந்துள்ளனர்.

திராவிட மாடல் அரசின் முயற்சியால், பெண்களின் முன்னேற்றம் கணிசமாக உள்ளது. வேலைவாய்ப்பில் 43% பெண்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். 13 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் பதவியேற்க உள்ளனர். இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்த அரசு எப்போதும் மக்களுக்கு பக்கபலமாக இருப்பதுடன், மக்களும் அரசுக்கு துணை நிற்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.