கோவையில் உள்ள புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவின் தேரோட்டம் பக்தி பரவசத்துடன் விமரிசையாக தொடங்கியது. இந்த முத்தித் தலம் எனக் கருதப்படும் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் “பேரூரா பட்டீசா” என முழக்கமிட, தேரின் வடம் பிடித்து ஈடுபட்டனர்.
செவ்வாய்க்கிழமை மாலை, பட்டீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நிறைவடைந்ததையடுத்து, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தேரில், தேவஸ்தான மூலவரான பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித் தனியே தேர்களில் எழுந்தருளினர்.

தொடர்ந்து, பேரூர் ஆதீனத்தின் மருவாசல அடிகளார், தேரின் வடம் எடுத்து கொடுத்து, அதன் பிறகு பக்தர்கள் பக்தி பெருமகிழ்ச்சியுடன் தேரை இழுத்தனர். தேரோட்டம் தொடங்குவதற்கு முன்னர், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த பட்டக்காரர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது.

இந்த தேரோட்டம், சிறுவாணி சாலை மற்றும் கோவிலின் மேற்கு, தெற்கு, வடக்கு ரத வீதிகள் வழியாக சென்று, மீண்டும் தேர் நிலை திடலை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஆயிரக்கணக்கான போலீசார் பணியில் ஈடுபட்டனர். இதற்காக, போக்குவரத்திலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.




Leave a Reply