கோவையில் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டைகள்: 6 பேர் கைது

Spread the love
கோவையில் இருந்து இருகூர் வழியாக சிங்காநல்லூர் செல்லும் ரயில் பாதையில் கடந்த 22ஆம் தேதி சூர்யாநகர் பகுதியில் தண்டவாளத்தில் மரக்கட்டைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் ரயில்வே காவல்துறையினருக்கு கிடைத்ததும், அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரக்கட்டைகளை அகற்றினர்.

அதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட ரயில்வே காவல்துறையினர், இந்த செயலில் ஈடுபட்டவர்கள் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த தினேஷ், கோகுல் கிருஷ்ணன், சசிகுமார், கார்த்திக், புல்லுக்காட்டைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் சேலத்தைச் சேர்ந்த வேதவன் என அடையாளம் கண்டனர்.

இவர்கள் ஆறு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இந்தச் செயலில் இவர்களுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள், எதற்காக தண்டவாளத்தில் மரக்கட்டைகள் வைக்கப்பட்டன என்பதையும் விசாரித்து வருவதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர்.