கோவையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான ஜாக் கமிட்டி சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.
ரம்ஜான் மாதம், இஸ்லாமியர்களின் பார்வையில் மிகச் சிறப்பான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்குவதற்கான வாய்ப்பு அளிக்கிறது எனவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் பாக்கியசாலி மாதமாகவும் நம்பப்படுகிறது. 30 நாட்கள் நோன்பு இருந்து, இறைவனின் அருள் பெற்ற பிறகு, ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்படும் வழக்கம் உள்ளது.
இந்த ஆண்டிற்கான ஈகைத் திருநாளை முன்னிட்டு, கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் திடலில், ஜாக் கமிட்டி சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் புத்தாடைகள் அணிந்து கலந்துகொண்டனர். தொழுகை முடிந்தபிறகு, இஸ்லாமியர்கள் ஒருவர் மற்றொருவரை கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
மேலும், இஸ்லாமியர்களின் பெரும்பான்மை பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில், ரமலான் சிறப்பு தொழுகை நாளை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply