கோவை மாவட்டம் மலை அடிவார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கிடையே காட்டு யானை தாக்குதல் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை மீது பலமுறை புகார்கள் தெரிவித்தும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட விராலியூர் பகுதியில் கடந்த வாரம் குப்பைகளை கொட்ட சென்ற ரத்னா மற்றும் செல்வி என்பவர்கள் மீது காட்டு யானை தாக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துயரச் செய்தியை அறிந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி, நேரில் சென்று பாதிக்கப்பட்ட இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், குடும்பத்திற்கு நிதி உதவியும் வழங்கி தங்களது ஆதரவையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் செல்வதுரை, அம்மா பேரவை இணைச் செயலாளர் விஜயகுமார், பேரூர் ஒன்றிய கழகச் செயலாளர் ராஜா (எ) ராமமூர்த்தி மற்றும் அதிமுக தகவல் தொடர்புத் துறை செயலாளர் சசிகுமார் உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தினார். மக்கள் பாதுகாப்பை புறக்கணிக்கும் நிர்வாக அலட்சியத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
Leave a Reply