,

கோவையில் யானை தந்தம் விற்க முயற்சி – இருவர் கைது

elephant tusk
Spread the love

கோவை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்ட விரோதமாக யானை தந்தம் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோவை வனச்சரக அலுவலர் தலைமையில் வனச்சரக பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த விசாகன் (40)  நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (40), வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரிட்டோ (43) மற்றும் செல்வராஜ் (38) ஆகியோர் யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட யானை தந்தம் ஒன்று கைப்பற்றப்பட்டது.  இதனையடுத்து வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரிட்டோ மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் யானை தந்தமானது சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த விசாகன் என்பவரது வீட்டில் வைத்து இருந்ததாகவும் அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சி செய்ததாகவும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர்  உத்தரவின்படி தலைமறைவான மேலும் இருவரை   தனிக்குழு அமைத்து தேடி வருகின்றனர்.