கோவையில் தங்க நகை பட்டறை நடத்தி வந்த சஞ்சய் என்பவரின் ஊழியர் ஒருவர், 80 கிராம் தங்கத்தை வேலைக்காக எடுத்துச் செல்லும் போது, வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் குழுவால் மாயாஜால முறையில் ஏமாற்றப்பட்டார். குடும்ப பிரச்சினை தீர்க்க பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி, விபூதி கலந்த தண்ணீர் தெளித்து, தன்னிடம் இருந்த தங்கத்தை ஒப்படைக்கச் செய்து, கொள்ளையர்கள் தப்பி சென்றனர்.
இதுகுறித்து சஞ்சய் அளித்த புகாரின் பேரில் வெரைட்டி ஹால் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி மற்றும் சுங்கச்சாவடி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையர்கள் மகாராஷ்டிரா நோக்கி தப்பிச் சென்றது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையில் சிறப்பு தனிப்படை நாக்பூரில் முகாமிட்டு, கொள்ளையர்களை சிக்கவைக்கும் திட்டம் தீட்டியது. போலீசார் சுற்றிவளைத்ததை அறிந்த கொள்ளையர்களின் உறவினர்கள் தடுக்கும் முயற்சி செய்தபோதிலும், அதிரடியாக நடந்த துரத்தலில் யாஷிம் அலி, குர்பானி, பாரித் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளி சலீம் அலியை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
விசாரணையில், கைதானவர்கள் ஈரானி கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. 18 வயதுக்குக் குறைவானோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோரை எளிதில் ஏமாற்ற முடியும் என்பதால், அவர்களையே குறிவைத்து மாயாஜால கொள்ளைகளை செய்துள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இவர்களின் கைவரிசை இருந்ததும் வெளிச்சம் கண்டுள்ளது.
இத்தனை ஆண்டுகளாக போலீசாரின் கண்ணுக்குத் தெரியாமல் செயல்பட்ட இந்தக் கும்பலை மாட்டவைத்த உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான தனிப்படையை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.



Leave a Reply