கோவை மாவட்டத்தில் பல மாதங்களாக கிராமங்களில் அச்சத்தை ஏற்படுத்தி வந்த ‘ரோலக்ஸ்’ என அழைக்கப்படும் காட்டு யானை, வனத்துறை அதிகாரிகளின் சிறப்பான நடவடிக்கையால் இறுதியாக பிடிபட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைகளுடன் ஒட்டியுள்ள கோவை மாவட்ட வனப் பகுதிகளில் ஏராளமான யானைகள் வாழ்கின்றன. அவை பெரும்பாலும் உணவு மற்றும் குடிநீர் தேடி வனத்திலிருந்து வெளியேறி, விவசாய நிலங்களுக்குள் நுழைந்து சேதம் விளைவிப்பது வழக்கமாக உள்ளது.

இதில், தொண்டாமுத்தூர் – நரசீபுரம் பகுதிகளில் ‘ரோலக்ஸ்’ என அழைக்கப்படும் ஒற்றை ஆண் யானை, அடிக்கடி கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தி வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் பதட்டத்தில் இருந்து, வனத்துறையிடம் யானையை மயக்க ஊசி மூலம் பிடித்து, அடர்ந்த காட்டு பகுதியில் விடுமாறு கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, வனத்துறை உயரதிகாரிகளின் அனுமதி பெற்று, ரோலக்ஸ் யானையை பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக தொடங்கின. வனக் கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன் மற்றும் மனோகரன் ஆகியோர் மயக்க ஊசி செலுத்தி யானையை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் முதல் முயற்சியில், மயக்க ஊசி பாய்ந்திருந்தபோதும், யானை தப்பித்து வனத்திற்குள் சென்று மறைந்தது.
பின்னர், தினமும் இரவு பகலாக வனத்துறையினர் யானையை கண்காணித்து வந்தனர். இதன்போது மீண்டும் மயக்க ஊசி செலுத்த முயன்ற மருத்துவர் விஜயராகவனை, யானை திடீரென தாக்கி காயப்படுத்தியது.

இதையடுத்து, டாப்ஸ்லிப் புலிகள் காப்பகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கபில்தேவ், நரசிம்மன், முத்து என்ற கும்கி யானைகள் ரோலக்ஸை கண்காணிக்க உதவின. ஆனால் நரசிம்மன், முத்து ஆகிய யானைகளுக்கு மதம் பிடித்ததால், அவை திருப்பி அனுப்பப்பட்டன. அவற்றுக்குப் பதிலாக ‘சின்னத்தம்பி’ என்ற கும்கி யானை சேர்க்கப்பட்டது.
இன்று அதிகாலை வனத்துறை மருத்துவர்கள் மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றனர். ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, கும்கி யானைகளின் உதவியுடன் அதை கட்டுப்படுத்தினர். பின்னர் வாகனத்தில் ஏற்றி, வனத்திற்குள் பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர்.

வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: “ரோலக்ஸ் யானை தற்போது பாதுகாப்பாக வனப் பகுதிக்குள் விடப்பட்டுள்ளது. அதன் இயக்கம் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது,” என தெரிவித்தனர்.



Leave a Reply