இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி தமிழ் நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் எனும் இந்தியாவின் மிகப்பெரும் குதிரை தடை தாண்டும் போட்டியை கோவையில் வரும் ஜூலை 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடத்த உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தியாளர் சந்திப்பு கோவை அவிநாசி சாலை நவ இந்தியா பகுதியில் உள்ள அலெக்ஸ்சாண்டர் இக்வெஸ்ட்ரியன் கிளப்பில் (ஜூலை 2) அன்று நடைபெற்றது. இதில் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ் நாடு தலைவர் A.S.சக்தி பாலாஜி செய்தியாளர்களிடம் நிகழ்ச்சியை பற்றி விளக்கினார்.
இந்த போட்டி ஜூலை 4 – 6 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டம் வெள்ளானைப்பட்டியை அடுத்த மூலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ‘பிசைட் தி இக்வெஸ்ட்ரியன் க்ரஸ்ட்’ எனும் தனியார் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான துவக்க நிகழ்வு ஜூலை 4-ம் தேதி நடைபெறுகிறது. இதில், நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கோவையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் உடன் சேர்ந்து இந்த போட்டிகளை துவக்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புல்ஸ் தமிழ் நாடு), பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் (கேரளா), பெங்களூரு நைட்ஸ் (கர்நாடகா), கோல்கொண்டா சார்ஜ்ர்ஸ் (தெலுங்கானா), குவாண்டம் ரெய்ன்ஸ் (கோவா) மற்றும் எலீட் இக்வெஸ்ட்ரியன்ஸ் (மேற்கு வங்காளம்) என் இந்தியாவின் 6 மாநிலங்களை பிரதிநிதித்துவம் செய்துள்ள அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்வில் நடைபெறும் குதிரை தடை தாண்டுதல் போட்டிகள், 110 சென்டிமீட்டர் மற்றும் 120 சென்டிமீட்டர் என 2 பிரிவுகளாக நடைபெறு உள்ளதாகவும் சர்வதேச குதிரையேற்ற கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற நடுவர்களான கரன்தீப் மற்றும் சமீர் ஆகியோர் இந்த நிகழ்வில் நடுவர்களாக செயல்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின் இறுதி நாளில் கேரளாவின் விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துரஹிமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகளை வழங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்தில் 2000 பேர் வரை அமர்ந்து போட்டிகளை பார்க்க முடியும் என்றும் மொத்தம் 3000 பேர் அங்கு கூடவும் இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தண்ணீர், சிற்றுண்டி, கழிவறை, பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்து அத்தியாவசிய வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிக்கான இலவச டிக்கெட்களை ticketprix.com. எனும் இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
Leave a Reply