கோவையில் தெரு நாய்களுக்கு ஆதரவாக கோவையில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்ட ஆர்வலர்கள்

Spread the love

நாடு முழுவதும் தெருநாய் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தெருநாய்களால் கடிக்கப்படுவது குறித்து அதிக புகார்கள் எழுந்துள்ளன. இதை முன்னிட்டு, உச்ச நீதிமன்றம், தெருநாய்களைப் பிடித்து, அவற்றுக்கு கட்டாயமாக தடுப்பூசி செலுத்த வேண்டும், கருத்தடை செய்ய வேண்டும், பின்னர் அவற்றை மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலேயே விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், தெருநாய் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவையில் நாய் ஆர்வலர்கள் பேரணி நடத்தினர். ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, “தெருநாய்களை பாதுகாப்போம், உணவளிப்போம்” எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள், நீதிமன்றம் கூறிய வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி கருத்தடை செய்வது மட்டுமே மனிதரும் நாய்களும் இணக்கமாக வாழ வழி வகுக்கும் என்றும் வலியுறுத்தினர்.

பேரணிக்குப் பிறகு பேட்டி அளித்த நாய் ஆர்வலர்கள், “ரேபிஸ் நோய் குறித்த பிரச்சனை இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம். ரேபிஸ் தடுப்பூசி என்பது நாய்கள் மட்டுமின்றி பூனைகள், எலிகள் கடித்தாலும் பயன்படுத்தப்படலாம். எனவே நாய் கடித்தாலே அது தெருநாய்களால் மட்டுமே ஏற்பட்டது என்று சொல்ல முடியாது” என தெரிவித்தனர்.

அத்துடன், வீட்டு நாய்களை வளர்ப்பவர்கள் பலர் கருத்தடை செய்யாமல் வைத்திருப்பதால், அவை சில நேரங்களில் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாகவும், அப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தாலும் பொதுவாக அதனை “தெருநாய் கடி” என்று குற்றம் சாட்டப்படுவதாகவும் கூறினர். மேலும், நாய்க்கடி சம்பவங்கள் குறித்து அரசு, அது வீட்டு நாய்களால் ஏற்பட்டதா அல்லது தெருநாய்களால் ஏற்பட்டதா என்பதைக் குறிப்பிட்டு வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.