கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தெருவில் சுற்றித் திரிந்த நாய்களுக்கு, சில குடியிருப்பு வாசிகள் விஷம் கலந்த உணவு வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித் திரிந்த வெறிநாய்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களைத் துரத்தியும், கடித்தும் அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தொல்லையைத் தடுக்க, சில குடியிருப்பு வாசிகள் 15க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் கலந்த உணவு வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் விலங்குகள் நல வாரியத்திற்குப் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், விலங்குகள் நல அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த நாய்கள் மற்றும் உயிருக்கு போராடிய நாய்களை மீட்டு, கோவை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
நாய்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்த போது, விஷம் ஊட்டப்பட்டு கொல்லப்பட்டதன் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை அடுத்து, விலங்குகள் நல வாரியத்தினர் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில், காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவரும் நிலையில், குடியிருப்பு வாசிகள் தாமாகவே நடவடிக்கை எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply