கோவையில் தனியார் கல்லூரி அருகே 5 கிலோ கஞ்சா பறிமுதல் – நான்கு வாலிபர்கள் கைது

Spread the love

கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனுடன் தொடர்புடைய நான்கு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பாலக்காடு சாலையில் பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதால், கல்லூரி மாணவர்களிடையே போதை பழக்கம் பரவுவதில் ஆழ்ந்த கவலை எழுந்துள்ளது. குறிப்பாக, மாணவர்கள் இலக்காகக் கொண்டு போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இதனையடுத்து, கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் காவல் துறை கண்காணிப்பு மற்றும் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அன்றாடம் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் பிற போதைப் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருப்பவர்கள் பிடிபட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

இந்நிலையில், கோவை சுகுணாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது மைதானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் – திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா (ஏற்கனவே கோவையில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்தவர்), ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மிருத்யுஞ்சயரனா, கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்த ஜான் பெட்டர் மற்றும் போத்தனூர் கணேசா புரத்தைச் சேர்ந்த முத்து எனத் தெரியவந்தது.

இவர்கள் மைதானத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்துவந்தது போலீசாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறையின் நடவடிக்கைகள் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *