கோவையில் ஜி.டி. அருங்காட்சியகத்தில் அதிநவீன கார் பிரிவு திறப்பு – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் சிறப்பு விழா

Spread the love

கோவையில் உள்ள ஜி.டி. நாயுடு அருங்காட்சியகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அதிநவீன கார் பிரிவை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்வை சர்வதேச வரலாற்று வாகனங்களின் கூட்டமைப்பான FIVAவின் துணைத் தலைவர் ராமின் சல்லேகு, கல்வியியலாளர் கிருஷ்ணராஜ் வானவராயர், மற்றும் ஜி.டி. நாயுடு அறக்கட்டளையின் அறங்காவலர் ராஜ்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “எனது தாத்தா, அப்பா மற்றும் குடும்பத்தினர் கூறிய ஜி.டி. நாயுடுவின் மேதாவித்தனமும் கண்டுபிடிப்புகளும் எனக்கு எப்போதும் பேராதர்ச்சியை அளித்துள்ளன. அவர் தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர்,” என நினைவு கூர்ந்தார்.

அதேவேளை, கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உரையாற்றியபோது, “இந்த ஜி.டி. நாயுடு அருங்காட்சியகம் கோவையில் கண்டிப்பாக பார்வையிட வேண்டிய இடங்களில் ஒன்றாகும். இது தொழில்நுட்ப வரலாற்றை மட்டுமின்றி புதுமைமையையும் பிரதிபலிக்கிறது,” என்றார்.

இந்நிகழ்வில் மோட்டார் விளையாட்டு துறையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பின்னர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழங்கால கார்கள் வைக்கப்பட்டுள்ள காட்சியகத்தை பார்வையிட்டார். குறிப்பாக பெரியார் பயன்படுத்திய பிரச்சார பேருந்தை ஆர்வமுடன் பார்வையிட்டு, அதன் உள்புற அமைப்பை ஆராய்ந்தார்.

அத்துடன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் ஜி.டி. நாயுடுவின் பேரன் ராஜ்குமார் ஆகியோர் பேருந்துக்குள் அமர்ந்து அதிலுள்ள வசதிகள் குறித்து உரையாடினர்.

இந்த நிகழ்ச்சி, ஜி.டி. நாயுடுவின் பாரம்பரியத்தையும், கோவையின் தொழில்நுட்ப சாதனைகளையும் ஒரே மேடையில் இணைத்துச் சென்றதாக பார்வையாளர்கள் பாராட்டினர்.