தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீடு குழு கோவையில் நடைபெற்று வரும் முக்கிய திட்ட பணிகள் மற்றும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் குழுவினர் கலந்துகொண்டனர்.
குழு தலைவர் காந்திராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆய்வின்போது தெரியவந்த முக்கிய அம்சங்களை வெளியிட்டார்:
🔸 அவிநாசி சாலை மேம்பாலம் (10.1 கிமீ):
மேம்பாலத்தின் பணிகள் முழுமையாக மூன்று மாதங்களில் முடிவடையும் எனக் கூறப்பட்டது. இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
(முன்னதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மேற்பகுதி பணிகள் இம்மாதம் இறுதியில் முடியும் என தெரிவித்திருந்தார்.)
🔸 மருதமலை லிப்ட் பணிகள்:
மருதமலையில் பக்தர்களுக்காக லிப்ட் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாறைகள் துளையிடும் பணிகள் காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளாலும், இரண்டு மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரலாம் என கூறப்பட்டது.
🔸 மிகப்பெரிய முருகர் சிலை:
மருதமலை அடிவாரத்தில், தெற்காசியாவில் மிக உயரம் கொண்ட முருகர் சிலை அமைக்கும் திட்டம் குறித்து அறநிலையத்துறை மற்றும் பொறியாளர்கள் கொண்ட குழு ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
🔸 மனிதர் – வனவிலங்கு மோதல்:
கோவை மாவட்டத்தில் யானை தாக்கி உயிரிழப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை. இதுபோன்ற உயிரிழப்புக்கான நஷ்டஈடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் ஏற்படுத்தும் சேதத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு வழங்கப்படும் நஷ்டஈடான ரூ.23,000 ஐ அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக அரசு ஆய்வு மேற்கொண்டுள்ளது.
🔸 வெள்ளலூர் குப்பை கிடங்கு:
இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குழுவினர் அறிவுறுத்தினர்.
🔸 சிறைச்சாலைகள்:
கைதிகளுக்கான அடிப்படை வசதிகள், அவர்கள் செய்யும் வேலையின் ஊதியம், கல்வி பெறும் வாய்ப்பு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மேட்டுப்பாளையம் அருகே புதிய சிறை நிர்வாகம் அமையுவதற்கான திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
🔸 சாலைகள்:
மாநகரத்திற்குள் உள்ள சில முக்கிய சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. இதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவற்றை விரைந்து சீரமைக்கும் பணிகள் தொடங்க வேண்டும் என குழு பரிந்துரை செய்தது.
இந்த ஆய்வு கோவையில் நடைபெற்று வரும் அரசுத் திட்டங்களை விரைவாக நிறைவேற்ற, மற்றும் மக்கள் பிரச்சனைகளை நேரில் கண்டறிந்து தீர்வு காண ஒரு வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Leave a Reply