, , ,

கோவையில் கொரியர் கம்பெனி பெயரில் கொள்ளை – போலீசார் எச்சரிக்கை……….

Spread the love
ஆன்லைன் வாயிலாக பல மோசடிகள் மூலம் அப்பாவி பொது மக்களின் வங்கி கணக்குகளில் இருந்து, பணம் பறிக்கும் கும்பல்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது அந்த பாணியை அவர்கள்,  சற்றே மாற்றி கொள்ளையடிக்கும்  நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன.
அப்படி கோவையில்   நூதனமான கொள்ளை சம்பவங்கள்  திடுக்கிட வைக்கிறது. இந்த நிகழ்வுகள் காவல்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. கோவை போத்தனூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு, மொபைலில் அழைத்தவர், பிரபல கொரியர் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறியுள்ளார். தாங்கள் ரஷ்ய நாட்டிற்கு, தங்கள் முகவரியில் இருந்து ஒரு  பார்சல் அனுப்பி உள்ளீர்கள்;அதில் சில பாஸ்போர்ட், துணி மணிகள் மற்றும் போதை பொருட்கள் உள்ளன. நாங்கள் பரிசோதனை செய்ததில் இதனைக் கண்டறிந்து உள்ளோம். இதுகுறித்து மும்பை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம் என, மொபைலில் கூறியுள்ளார். அந்த நபரே, சைபர் கிரைம் போலீசார் பேசுகிறார்கள் என, வேறு நபருக்கு அந்த போனை கனெக்ட் செய்துள்ளார்.
அப்போது பேசியவர்,தங்கள் அனுப்பிய பார்சலில் போதை பொருள் உள்ளது. இதனை பெரிது படுத்தாமல் நாங்கள் விட்டு விடுகிறோம். நாங்கள் கேட்கும் தொகையினை தாருங்கள் என கேட்டுள்ளார். உஷாரான போத்தனூர் தொழிலதிபர், தனது வழக்கறிஞரிடம் இது பற்றி தெரிவித்தார். வழக்கறிஞரும் வந்த எண்களை சோதித்த போது, அந்த எண்கள் போலியானவை என தெரிய வந்ததை அடுத்து, கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த நூதன கொள்ளை முயற்சி குறித்து, சைபர் கிரைம் போலீசார் கூறுகையில்,
பிரபல கொரியர் கம்பெனியிலிருந்து பேசுவதாக கூறி நூதன முறையில் வங்கி கணக்கில் கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் சில சமூக விரோதிகள் அண்மைக்காலமாக செய்து வருகின்றனர். இவர்களின் இலக்கு தொழிலதிபர்கள், வியாபாரிகள்,
ஓய்வு பெற்றவர்கள் என வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்பவர்களே. இவர்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கும் இந்த கொள்ளை கும்பல், மும்பை கொரியர்  அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவே, பேச்சை தொடங்குகின்றனர்.  அந்த நேரத்துக்கு அவர்கள் ,ஏதாவது ஒரு நாட்டின் பெயரைச் சொல்லி , அங்கு தங்கள் பார்சல் அனுப்பி உள்ளீர்கள். அந்தப் பார்சல் உடன், தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் உள்ளன என மிரட்டுகின்றனர். அவர்களின் துணைக்கு சைபர் கிரைம் போலீஸ் எனவும் பயன்படுத்தி, நூதன பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ,தனது வங்கிக் கணக்கில் இருந்த தொகையினை இழந்துள்ளார். அதேபோல கணபதியை சார்ந்த நபர் ஒருவர் இரண்டு கோடி ரூபாய் வரை ஏமாந்து உள்ளார்.
மற்றொரு நபர் 55 லட்சம் பறி கொடுத்துள்ளார். மேலும் சிலர் ஏமார்ந்து உள்ளனர் இப்படி ஏமாந்தவர்கள், அவர்கள் போன் செய்தவுடன், பயந்து கொண்டு, அவசரமாக  “ஸ்கைப்” செயலி வாயிலாக  தங்களது போன் மூலம் , பத்தாயிரம்,  இருபதாயிரம் என அனுப்புகின்றனர் .
அப்படி அனுப்பும் போது ,அனுப்புபவரின் தரவுகள் அனைத்தும் மோசடி கும்பலின் கைக்கு சென்று விடுகிறது. இதில் தனிப்பட்ட கணக்கும் அடங்கும். அவர்களின் நிறுவன வங்கிக்கணக்கும்இருக்கும்.  இதிலிருந்து நூதன முறையில் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடித்து விடுகின்றனர். எனவே முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் போன் கால்கள், கொரியர் கம்பெனியிலிருந்து  வரும்  அழைப்புகள் உள்ளிட்ட அனைத்து அழைப்புகளையும் உஷாராக இருந்து பேச வேண்டுமென காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.