கோவையில் பல கோடி ரூபாய் மோசடி சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கோவையை சேர்ந்த ஹேமந்த் பாஸ்கர் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் GROKR என்ற செயலியை பயன்படுத்தி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என வாட்ஸ்அப் மூலம் தகவல் பரப்பி பலரை மோசடிக்கு ஈடுபடுத்தியதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் கூறியது, புதிய உறுப்பினர்கள் 1,000 டாலர் முதல் 3,000 டாலர் வரை முதலீடு செய்ய வலியுறுத்தப்பட்டனர். ஆரம்பத்தில் லாபம் செயலியில் தரப்பட்டாலும், பின்னர் பணத்தை மீட்டெடுக்க விடாமல் மீண்டும் முதலீடு செய்ய வலியுறுத்தப்பட்டது. மேலும், குழு தலைவர்களுக்கு மட்டுமே தங்க நகைகள் வழங்கப்பட்டதால் மற்றவர்களும் அதற்காக மேலதிக முதலீடு செய்தனர்.
இந்நிலையில், செயலியின் log in திடீரென நிறுத்தப்பட்டதால், கடன் எடுத்து முதலீடு செய்த பலர் பணத்தை மீட்டெடுக்க முடியாமல் உள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்து, தங்களது பணத்தை மீட்டு கொடுக்க கோரி கோரிக்கை வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மேலும், வேறு குழுவில் சேர்ந்து முதலீடு செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



Leave a Reply