துடியலூர் அருகிலுள்ள வட்டமலைப் பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி பின்புறம் உள்ள புதர்ப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வேடம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பாண்டி, துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து ஆய்வாளர் தவசியப்பன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இளம்பெண்ணின் தலையில் கட்டையால் பலமாக தாக்கப்பட்ட காயம் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மூலம் அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்ட இளம்பெண் திருமணமானவர் என்றும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இளைஞருடன் கள்ளக்காதல் தொடர்பு இருந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. சமீபத்தில் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தகராறாக மாறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பேச வேண்டும் என்று கூறி அந்த இளைஞர், இளம்பெண்ணை மோட்டார் சைக்கிளில் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கட்டையால் தலையில் பலமாக தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அடையாளம் தெரியாமல் இருக்க மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை எடுத்து, உடலில் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலைச் சம்பவம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.



Leave a Reply