கோவை கொடிசியா மைதானத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் கோவை தொகுதி வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேடையில் அவர் பேசியதாவது, “தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டத்தை அ.தி.மு.க., கொண்டுவந்தது. அந்த திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி தற்போது தி.மு.க., அரசு திறந்து வைக்கிறது.
ஸ்டாலினுக்கு தில், திராணி, தெம்பு இருந்தால் ஒரே மேடையில் என்னை சந்திக்கலாம்;. உங்கள் ஆட்சியில் கொண்டுவந்த திட்டத்தை நீங்கள் பேசுங்கள், எங்கள் ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை நான் பேசுகிறேன். எந்த இடத்தில் என்றாலும் சரி, வரத் தயார். நாங்கள் பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம். பிறகு உங்களுக்கு ஏன் எரிகிறது? நீங்கள் மோடியை எதிர்க்கிறீர்கள் தானே? பிறகு ஏன் அவரை தமிழகத்திற்கு அழைத்து வந்து சரணாகதி அடைகிறீர்கள்.
வெள்ளைக் குடை பிடித்த பொம்மை வேந்தர் என ஸ்டாலினுக்கு பட்டம் கொடுத்தால் சரியாக இருக்கும். கச்சத்தீவை இந்தியாவோடு இணைக்க வேண்டும் என தொடந்து குரல் கொடுக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.; அதற்கு எங்களுக்குத் தான் தகுதி உள்ளது.
தி.மு.க., அரசு ஒரு திட்டத்தை அறிவிப்பார்கள், அதற்கு ஒரு குழுவை ஆரம்பிப்பார்கள், அத்துடன் அந்த திட்டம் முடிந்துவிடும். வீட்டு வரி, கடை வரி, குப்பை வரி, அனைத்து வரிகளையும் உயர்த்தியது தி.மு.க., அரசு.
மின் கட்டணத்தை உயர்த்து தொழிலை அழித்து வருகிறது தி.மு.க., அரசு.கோவை மாநகராட்சியில் 500 சாலைகளை சீரமைக்க அ.தி.மு.க., ஆட்சியில் டெண்டர் விடப்பட்டது. தி.மு.க., அரசு வந்ததும் அதனை ரத்து செய்தது. ஏழை மக்களுக்கு கொடுக்கும் பொங்கல் தொகுப்பில் கூட ஊழல் செய்துள்ளனர்.
தேர்தல் பத்திரம் மூலம் பல கோடியை வாங்கிவிட்டு, உத்தமனைப்போல் நடிக்கிறார். சிவாஜிகணேசன் உயிரோடு இருந்திருந்தால் உங்கள் நடிப்பை பார்த்து மயங்கி விழுந்துவிடுவார். செந்தில் பாலாஜி நல்லவேளையாக சிறை சென்றுவிட்டார். இல்லையென்றால் கோவையே போண்டி ஆயிருக்கும்.”என்று பேசினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர். ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், உடுமலை ராதாகிருஷ்ணன், ஏ.கே.செல்வராஜ், வி. பி.கந்தசாமி, டி கே.அமுல் கந்தசாமி, கே ஆர்.ஜெயராம் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்
Leave a Reply