கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, “ஆபரேஷன் கிளீன் கோவை” என்ற சிறப்பு சோதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் 2 டிஎஸ்பி, 10 ஆய்வாளர்கள், 412 காவலர்கள் என மொத்தம் 91 குழுக்களாக பிரிந்து, கோவை மாவட்டம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் திடீர் சோதனைகள் நடத்தினர். இதன்போது 6.3 கிலோ கஞ்சா, 52 கிலோ குட்கா, கூலிப் பாக்கெட், 8 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், 13 குற்றவாளிகள், 55 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.
சோதனையில் ஆவணங்கள் மற்றும் எண்கள் இல்லாத 46 இருசக்கர வாகனங்கள், வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்டவர்களில் நால்வருக்கு முன்பே கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாகவும், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவரிடம் தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,
“போதைப்பொருட்கள் எங்கிருந்து வருகிறது, யார் சப்ளை செய்கிறார்கள், யாருக்கு தொடர்பு உள்ளது என்பன குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேவையான இடங்களில் மேலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்றார்.
மேலும், கல்லூரி மாணவர்களை தவறான பாதையிலிருந்து மீட்க ஆலோசனை வழங்கப்படுவதாகவும், சிலர் மறுவாழ்வு பயிற்சிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “கல்லூரிகள், விடுதிகள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் காவல்துறையை நேரடியாக அணுகலாம். போதைப்பொருள் தொடர்பான புகார்களுக்கு தனி தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது,” என்றும் தெரிவித்தார்.
அதேபோல், பொள்ளாச்சிக்கு அருகே உள்ள பள்ளியில் மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவத்திலும், சம்பந்தப்பட்ட இரண்டு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



Leave a Reply