, , ,

கோவில் நிதியில் சொகுசு கார்கள் வாங்குவது தவறு! அறநிலையத்துறைக்கு உச்சநீதி மன்றம் ஆணை

aranilayathurai
Spread the love

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் கிடைக்கப்பெறும் நிதியில் அதிகாரிகளுக்கு சொகுசு கார்கள் வாங்குவது, சொகுசு காரியங்களுக்காக  பயன்படுத்து வது தவறு என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பெரும்பாலான இந்து கோவில்கள் செயல்படும் நிலையில், பொதுமக்கள் கோவிலுக்கு வழங்கும் நிதியை திமுக அரசு முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ’கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு, கோயிலுக்குக் காணிக்கையாக கொடுத்த மாடுகளைக் காணவில்லை, கோயிலின் வைப்பு நிதி குறைந்துவிட்டது’  அறநிலையத் துறை மீதான குற்றச்சாட்டுகள் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகின்றன.

அண்மையில் கூட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ’’திருச்செந்தூர் முருகன் கோயிலில் 5,300 மாடுகளை காணவில்லை. திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய மாடுகள் குறித்தான தகவல்கள் உள்ளன. அந்த மாடுகளை ஏலம் விட்டது யார்? மாட்டை திருடி சென்றனரா என்பது குறித்தான தகவல்கள் தெரியவில்லை. வடிவேலு கிணற்றை காணோம் என்பது போல் மாட்டை காணவில்லை’’ என வேடிக்கையாகப் பேட்டியளித்தார்.

இதேபோல பழனி முருகன் கோயிலுக்கு காணிக்கையாக அளித்த தங்கவேல் கணக்கில் வரவில்லை என கூறி சென்னையைச் சேர்ந்த நன்கொடையாளர் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். பின்பு, விசாரணையில் அந்த தங்கவேல் கண்டுபிடிக்கப்பட்டு கணக்கில் சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்த 2 ஆண்டுகளில் சமயபுரம் கோயிலின் சேமிப்பு நிதியில் ரூ. 422 கோடி குறைந்துள்ளதாகவும் , அதிலிருந்து இன்னோவா, ஸ்கார்பியோ என 2 கார்கள் வாங்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர்.ரமேஷ் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் கோவில்களில் கிடைக்கும் நிதியில் இருந்து துறை அதிகாரிகள் மட்டுமின்றி மற்ற துறை அதிகாரிகளுக்கும் சொகுசு கார்கள் வாங்கப்படுவதுடன், பல்வேறு அரசு திட்டங்களுக்கும் கோவில் நிதி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டில்  கோயில் நிதியில் முறைகேடுகள் செய்யப்படுவதாக  உச்சநீதிமன்றத்தில்  பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆலயம் காப்போம் என்ற அமைப்பின் சார்பில்  உச்சநீதி மன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் பெரும்பாலான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்காத நிலையில், மறைமுகமாக கோவில் நிதியில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அவ்வாறு கோவில் நிதியை அறநிலையத்துறைக்கு மாற்றியதை திரும்ப வழங்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு சுஇன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக கோவில்களுக்கு வரும் உண்டியல் காசுகளை முறைப்படுத்த ஏதும் திட்டங்கள் உள்ளதா என்று கேள்வி கேட்ட  உச்சநீதிமன்றம்,   தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் வரும் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது எனவும்  தமிழ்நாடு அரசுக்குச  கேள்வி எழுப்பியது.

மேலும், தமிழக கோவில்களில் இருந்து கிடைக்கும்  நிதியானது,  கல்வி போன்ற சமூக நல திட்டங்களுக்கு பயன்படுத்தினால் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்த  நீதிபதிகள், மாறாக கோவில்   நிதியை கொண்டு உயர் ரக கார்கள் வாங்குவது போன்ற சொகுசு காரியங்களுக்காக அரசு பயன்படுத்தினால் தவறு எனவும் தெரிவித்துள்ளது.