, , ,

கோயம்புத்தூரின் சமூக சேவையாளர்களுக்கு மகாத்மா காந்தி நினைவகம் வழங்கிய மனிதநேயம் விருது 2025

Spread the love
கோயம்புத்தூரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவகம்  (MGM) கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி நிறுவப்பட்டது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது உன்னதமான கொள்கைகளையும் மக்களுக்கு விளக்குவதற்காக இந்த நினைவகம் மற்றும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.
1934-ஆம் ஆண்டு பிப்ரவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் வந்த மகாத்மா காந்தி, புகழ்பெற்ற விஞ்ஞானியும் அறிவியல் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடு அவர்களின் போத்தனூர் இல்லத்தில் தங்கியிருந்தார். அந்த நிகழ்வின் நினைவாக, அவரது இல்லம் புதுப்பிக்கப்பட்டு, மகாத்மா காந்தி நினைவகமாக மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் கோயம்புத்தூர் வருகை சம்பவித்து 91 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் விதமாக, மனிதநேயம் விருது 2025 வழங்கும் விழா மார்ச் 14, 2025 அன்று கோயம்புத்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்தில் விமர்சையாக நடைபெற்றது. சமூக நலத்திற்காக தன்னலமின்றி பணியாற்றி வரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களை கௌரவிப்பதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
மனிதநேயம் விருது 2025 சமூக ஆர்வலர்களுக்கான கௌரவம்.
சமூகத்திற்கும் சுற்றுச்சூழலிற்கும் முக்கிய பங்காற்றி, அங்கீகாரம் எதிர்பாராமல் சேவை செய்து வரும் சமூக ஆர்வலர்களை கௌரவிக்கவே இந்த விருது வழங்கப்படுகிறது. (MGM) குழு, கோயம்புத்தூரில் இருந்து சமூக சேவையில் தனித்துவம் பெற்ற 10 நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் அயராத சேவையை பாராட்டி விருது வழங்கியுள்ளது. இந்த விருது, அவர்களின் மனிதநேயத்தை கௌரவிப்பதற்காகவே வழங்கப்பட்டது.
விருது பெற்ற கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் :-
• திரு. M. யோகநாதன்,
• திரு. P. மகேந்திரன்
• திரு. ராஜ சேது முரளி
• திரு. A. லோகநாதன்
• திருமதி. V. வைரமணி
தஸ்லீமா நஸ்ரீன்
• திரு. கணேஷ் சோமசுந்தரம்
• திரு. L. உதிரம் கோபி
• திருமதி. C. ஜெயப்ரபா
• திருமதி. N. வள்ளி
விழாவில் முதன்மை விருந்தினராக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பணவர், கலந்து கொண்டு விருதுகளை வழங்கி, பேசியதாவது:- தேசப்பிதா மகாத்மா காந்தி பாதம் பட்ட இடத்தில் நாம் நிற்பது பெருமை. காந்தியின் அகிம்சை கொள்கை காலம்தாண்டி நிற்கிறது. காந்தியின் அமைதி வழியில் நாம் அனைவரும் அவரது கொள்கையை பின்பற்ற வேண்டியது முக்கியம். உலகம் அமைதி வழியில் பயணிக்க காந்திய அகிம்சை கொள்கை நமக்கு வழிகாட்டும். விருது பெறும் அனைவரையும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் காந்திகிராம பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் காந்தியவாதி திரு. என். மார்க்கண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: காந்திய கொள்கையை இந்த உலகம் பிற்பற்ற வேண்டும். காந்திய கோள்கையை பின்பற்றவது ஒன்றே இந்த உலகம் அமைதி வழியில் பயணிக்க ஏற்ற வழியாகும். இன்றைக்கு உலகம் வன்முறை, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற பிசாசுகளின் பிடியில் சிக்கித்தவிக்கிறது. இந்த கொடுமைகளில் இருந்து விடுபட காந்திய அகிம்சை கொள்கை ஒன்றே வழியாகும். அணுசக்தியை கண்டறிந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அழிவுப்பாதைக்கு வித்திட்ட தமது கண்டுபிடிப்பை எண்ணி கடைசி காலத்தில் மனம் நொந்து உயிர்விட்டார். பிரபல பொருளாதார மேதைகள் கூட காந்தியின் கிராம பொருளாதாரத்தை கண்டு வியந்துள்ளனர்.  ஐந்தாண்டு திட்டங்கள் தயாரித்த பொருளாதார நிபுணர்களிடம் கூட ஏழை, எளிய மக்ககளின் வாழ்க்கை மேம்படும் வகையிலான திட்டங்கள்தான் நாட்டுக்கு தேவை என்றார் மகாத்மா காந்தியடிகள். இன்றைக்கு காந்திய வழியை பின்பற்றுகிறவர்கள் மிக குறைவு. இன்றைய கால கட்டத்திலும் காந்திய வழியை பின்பற்றியதால் விருது பெறுகிறவர்களை வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
கோவையைச் சேர்ந்த கல்வியாளர் திரு. பி.கே. கிருஷ்ணராஜ் வணவராயர் தொடக்க உரையாற்றி பேசியதாவது : இன்று காந்தியடிகள் கோவை போத்தனூரில் வந்து தங்கியிருந்த இடம் 90 ஆண்டு நினைவுகளை சுமந்து நிற்கிறது. இந்த இல்லம் ஜிடி நாயுடு குடும்பத்தினர் வசம் சிக்கியதால் நினைவு சின்னமாக நிற்கிறது. இல்லாவிட்டால் ஒரு திரையரங்கு, ஷாப்பிங் மால் என மாறி இருக்கும். காந்திய கொள்கையை கடை பிடிப்பவர்கள் அகிம்சை வழி நடப்பவர்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர். இங்கு 91 வயதை தாண்டிய காந்திய வாதிகளை காணமுடிகிறது. காந்திய கொள்கைகளை இளம் தலை முறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மகாத்மா காந்தி நினைவக அறங்காவலர் திரு. ஜி. டி. ராஜ்குமார் வரவேற்புரை நிகழ்த்த, ஜி.டி. நாயுடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. ஜி.டி. கோபால் விழாவை சிறப்பித்தார்.
இந்த நிகழ்வு, சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும், பலராலும் அறியப்படாத சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் முக்கியமான தருணமாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *