கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில், கோவையின் காவல் தெய்வமாக மக்களால் போற்றப்படுகிறது. இக்கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுகின்றனர்.
ஆண்டு தோறும் விமர்சையாக நடத்தப்படும் கோனியம்மன் கோவில் திருவிழா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும், புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் அம்மன் பவனி வந்தார்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. அம்மன் எழுந்தருளிய தேர், ராஜவீதியில் இருந்து புறப்பட்டு ஒப்பணக்கார வீதி, கருப்ப கவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக சென்று மீண்டும் தேர் திடலை வந்தடைந்தது.
இந்த விழாவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம், பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேர் வடம் பிடித்து இழுத்து, பாரம்பரிய முறையில் உப்பு வீசி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பலரும் அன்னதானம் வழங்கி சேவை செய்தனர்.
இவ்விழா வெகு சிறப்பாக நடைபெற்ற போது, கூட்ட நெரிசலின் போது சில பக்தர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வாய் தகராறு மோதலாக மாறிய நிலையில், பொதுமக்கள் மற்றும் போலீசார் தலையிட்டு அமைதிப்படுத்தினர். கோவை இடையர் வீதி பகுதியில், போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, தேரோட்டம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பணிக்கு அதிக எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கப்பட்டனர்.
Leave a Reply