கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவு நடத்தி வந்த “21 ஆம் நூற்றாண்டில் தமிழ்மொழிக் கல்விக்கான தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகள்” குறித்த ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம், கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் காலை 8.30 மணிக்கு இறை வணக்கத்துடன் தொடங்கியது.
கருத்தரங்கத்திற்கு தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் உதவிப்பேராசிரியரும் பொறுப்பு தலைவருமான அ. இராஜலட்சுமி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் வே. சங்கீதா, சுயநிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் இரா. சரவணமூர்த்தி மற்றும் த. குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
த. குமார் அவர்கள் “தமிழ்மொழிக் கல்வியும் தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகளும் – 21 ஆம் நூற்றாண்டின் அடைவுகள்” என்ற தலைப்பில் தலைமை உரை நிகழ்த்தினார். தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் தமிழ் மொழி கல்வியின் வளர்ச்சி எப்படி இணைந்து செல்கிறது என்பதை விரிவாக விளக்கினார்.

இரா. சரவணமூர்த்தி அவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் இலக்கியம், இலக்கணம் மற்றும் மொழியியல் துறையின் பங்களிப்பு குறித்து கருத்துரைத்தார்.
மலேசியா மலாயா பல்கலைக்கழக மொழியியல் துறை இணைப் பேராசிரியர் இரா. செல்வஜோதி அவர்கள் “இருபத்தியோராம் நூற்றாண்டில் தமிழ்மொழி கற்றல், கற்பித்தல், ஆய்வு அணுகுமுறைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். தொல்காப்பியத்தில் காணப்படும் ஆய்வியல் அணுகுமுறைகளின் அறிவியல் கோட்பாடுகளை எடுத்துக்கூறினார்.
அதே பல்கலைக்கழகத்தின் மொழி மற்றும் மொழியியல் புலத் தலைவர் சி.ம. இளந்தமிழ் அவர்கள் “தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். ChatGPT, Gemini போன்ற நவீன செயற்கை நுண்ணறிவு செயலிகள் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு எவ்வாறு துணைபுரிகின்றன என்பதையும், மாணவர்கள் அவற்றின் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.
கருத்தரங்கத்தின் இரண்டாவது அமர்வில் மலாயா பல்கலைக்கழக மாணவர்களும், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்மொழி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை மாணவர்களும் கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கிடையேயான சமூக, கலை, பண்பாடு மற்றும் வரலாற்றுச் செய்திகள் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்வின் நிறைவாக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் பு. பிரபுராம் நன்றியுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து உதவிப்பேராசிரியர் மா. சேதுமாதவன் மொழி வாழ்த்து பாடியதன் மூலம் கருத்தரங்கு நிறைவடைந்தது.




Leave a Reply