, ,

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இளைஞா் மாநாடு – 2025

kongunadu arts and science college
Spread the love

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் சுவாமி விவேகானந்தா் வாசகர் வட்டமும் தஞ்சாவூர், ஸ்ரீ இராமகிருஷ்ண மடமும் இணைந்து சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்திய இளைஞா் மாநாடு  – 2025 கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் உள்ள முனைவா் மாரப்ப கவுண்டா் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநா் பேராசிரியா் முனைவா் வி. காமகோடி சிறப்புவிருந்தனராகப் பங்கேற்று “இந்தியா விஸ்வகுரு ஆவதற்கு நம் இளைஞர்களின் பங்கு” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அவா்தம் உரையில், “எதிர்வரும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாகத் திகழ்வதற்கு நம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். ஐக்கிய நாடுகள் அவை பதினேழு குறிக்கோள்களைப் பட்டியலிட்டுள்ளது என்றும் நம் நாடு வல்லரசு ஆவதற்கு அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அவற்றுள் நான்காவது குறிக்கோள் கல்வி குறித்து அமைந்துள்ளது என்றும் குறைந்த செலவில் தரமான கல்வியை அனைவருக்கும் தரவேண்டும் என்றும்  கூறினார்.

உலக அளவில் அதிக இளைஞா்களைக் கொண்ட நாடாக நமது நாடு உள்ளது. ஆனால், தேசிய அளவில் இருபத்தேழு விழுக்காடு மாணவ, மாணவியரே உயா்கல்வியில் சோ்கின்றனா். இதை உயா்த்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. கல்வி கற்கப் பொருளாதார வசதி தடையாகிவிடக் கூடாது. ஏழ்மையால் ஒருவரால் கல்வியை அடைய இயலவில்லை என்றால் அந்த ஏழை மாணவரிடம் நாம் கல்வியைக் கொண்டு சோ்ப்போம் என்று சுவாமி விவேகானந்தா் குறிப்பிட்டுள்ளார். விவேகானந்தர் கூறியதை நாம் செயலாக்க வேண்டும் என்றும் வசுதைவ குடும்பகம் என்னும் உலகத்தை ஒன்றாகப் பார்க்கும் சிந்தனையை நம் பாரதம் உலகுக்கு வழங்கியது என்றும் குறிப்பிட்டார். நிலைத்தன்மை, தன்னிறைவு, தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் முனைவு ஆகியவை நம் நாட்டை வல்லரசாக்கும் வழிகள் என்று வலியுறுத்தினார்.

இவ்விழாவில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் வே. சங்கீதா வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டா் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றினார். தஞ்சாவூா் இராமகிருஷ்ண மடத்தின் மடாதிபதி விமுா்த்தானந்த மகராஜ், கேரளா கோயிலாண்டி இராமகிருஷ்ண மடத்தின் மடாதிபதி நரசிம்மானந்த மகராஜ் மற்றும் கத்தார் தோஹா வங்கியின் முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டா் ஆர். சீதாராமன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினா். சுவாமி விவேகானந்தா் வாசகா் வட்டத்தைச் சார்ந்த மாணவா் சி. எழில் நன்றி நவின்றார். விழாவின் நிறைவில் சுவாமி விவேகானந்தரின் வாசகங்களைக் கூறி மாணவ, மாணவியா் உறுதிமொழியேற்றனா்.