கைவிட்ட தாய்…..பொம்மையுடன் தவிக்கும் தாய்……………..

Spread the love

சிறிய குரங்கு, ஒரு ஓராங்குட்டன் பொம்மையைக் கட்டியணைத்துக் கொண்டிருக்கும் காட்சி மக்களை மிகுந்த வேதனைக்குள் ஆழ்த்தியுள்ளது. காண இது ஒரு அழகான காட்சியாகத் தெரிந்தாலும், இதற்குப் பின்னால் பெரும் சோகம் மறைந்திருக்கிறது.

ஜப்பானில் உள்ள இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில், ‘பஞ்ச்’ என்ற 6 மாத குரங்குக்குட்டி உள்ளது. பிறந்த சிறிது நேரத்திலேயே தாயால் ஏதோ ஒரு காரணத்துக்காக கைவிடப்பட்ட பஞ்ச், உயிரியல் பூங்கா ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது.

பின்னர், சக குரங்குகளுடன் வாழ்வதற்காக அது மற்றொரு உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது. அங்கு, மற்றொரு தாய்க்குரங்கு அதை தத்தெடுத்துக் கொள்ளும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தன் இனத்தை சேர்ந்த மற்ற குரங்குகளுடன் பழகுவது பஞ்ச்சுக்கு சவாலாக இருந்தது. கூட்டத்தின் விதி முறைகள் தெரியாமல் பஞ்ச் வலம் வந்து கொண்டிருந்தது. சில பெரிய குரங்குகள் பஞ்சை துன்புறுத்தின. கூட்டத்தில் சேர விடாமல் தடுத்தன. இதனால், மற்ற குரங்குகளுடன் பழகுவது பஞ்சுக்கு சவாலாகவே இருந்தது.

இந்த தருணத்தில், பஞ்ச்சிற்கு, பூங்கா ஊழியர் ஒருவர் ஒரு ஒராங்குட்டன் பொம்மையை பரிசாக கொடுத்தார். தற்போது, அந்த பொம்மைதான் பஞ்ச்சின் உலகமாக மாறி விட்டது.

பஞ்ச் எங்கு சென்றாலும் அந்த பொம்மையை தன்னுடனையே தூக்கிச் செல்கிறது. தூங்கும்போது அதைக் கட்டியணைத்துக் கொள்கிறது; பயந்தால் அதனை இறுக்கமாகப் பற்றிக் கொள்கிறது. மற்ற குரங்குகளுடன் பழகத் தொடங்கினாலும், ஒரு வித பாதுகாப்பு உணர்வுக்காக அந்த பொம்மையை எப்போதும் தன் அருகிலேயே வைத்து கொண்டு வாழ்கிறது.

குழந்தைகள் தூங்கும்போது ஒரு குறிப்பிட்ட போர்வையையோ அல்லது பொம்மையையோ பக்கத்தில் வைத்திருப்பதை பார்த்திருப்போம். அதை கட்டிபிடித்துக் கொண்டோ அல்லது மேலே போட்டுக் கொண்டோ உறங்கும். அந்த துணியை பறித்தால் அழ தொடங்கி விடும். தன்னை அறியாமல் உருவான ஒரு பாதுகாப்பு உணர்வுதான் இதற்கு காரணம். அப்படித்தான், ஓராங்குட்டன் பொம்மை பஞ்சிற்கு இப்போது ஆறுதலாக அமைந்துள்ளது.