கேரளாவில் தொடங்கியது ஈஷா கிராமோத்சவ விளையாட்டு விழா

Spread the love

கோவை ஈஷா சார்பாக 17வது ஆண்டு கிராமோத்சவ விழா ஆகஸ்ட் 23 முதல் கேரளாவில் தொடங்கியது. கேரளாவில் இருந்து 700க்கும் மேற்பட்ட போட்டியாளர்களும் 140க்கும் மேற்பட்ட அணிகளும் பங்கேற்கின்றனர். போட்டிகள் காசர்கோடு, கண்ணூர், திருச்சூர், பாலக்காடு, எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் என ஆறு மாவட்டங்களில் நடைபெறும்.

கிராமோத்சவம் மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது. கிளஸ்டர் அளவில், கோட்ட அளவில் மற்றும் இறுதிப் போட்டி. கேரளாவில், கிளஸ்டர் அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 23-24 தேதிகளில் திருச்சூரில் உள்ள வரந்தரப்பள்ளியிலும், எர்ணாகுளத்தில் உள்ள அம்பலமுகலிலும் நடைபெறும். ஆகஸ்ட் 28-29 தேதிகளில் காசர்கோடில் உள்ள செருவத்தூரில் போட்டிகள் நடைபெறும். பின்னர், திருவனந்தபுரத்தில் உள்ள போத்தன்கோடு மற்றும் கண்ணூரில் உள்ள வெள்ளச்சல்-மக்ரேரி ஆகஸ்ட் 30-31 தேதிகளில் போட்டிகள் நடத்தப்படும். செப்டம்பர் 1-2 தேதிகளில் பாலக்காட்டில் உள்ள அயிலூரிலும் போட்டிகள் நடைபெறும். தேசிய அளவில், ஈஷா கிராமோத்சவம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் ஒடிசாவில் உள்ள 35,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவியுள்ளது. இந்த ஆண்டு 5,000 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 50,000 க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் 6,000 க்கும் மேற்பட்ட அணிகளாக போட்டியிடுகின்றனர். இறுதிப் போட்டி செப்டம்பர் 21 ம் தேதி கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகியில் நடைபெறும். மொத்த பரிசுத் தொகை ரூ. 67 லட்சம் ஆகும்.

விளையாட்டு போட்டிகள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் தவில்-நாதஸ்வரம், வள்ளி கும்மி, ஒயிலாட்டம், கேரளாவின் பஞ்சரி மேளம், செண்ட மேளம், தெலுங்கானாவின் குசாடி நடனம் மற்றும் கர்நாடகாவின் புலி வேஷம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. கோலம் வரைதல் மற்றும் சிலம்பம் போன்ற பொதுப் போட்டிகள் பண்டிகை சூழலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. கிராமப்புற மக்களை போதைப் பொருட்களிலிருந்து விடுவித்தல், சாதி மற்றும் மதத் தடைகளைத் தாண்டி, சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இந்தியாவின் கிராமப்புற உணர்வை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் சத்குரு ஈஷா கிராமோத்சவம் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொழில்முறை விளையாட்டுப் போட்டிகளைப் போலல்லாமல், விவசாயிகள், துப்புரவுப் பணியாளர்கள், மீனவர்கள், இல்லத்தரசிகள் போன்ற சாதாரண கிராமப்புற குடிமக்களுக்காக மட்டுமே ஈஷா கிராமோத்சவம் பிரத்தியேகமாக நடத்தப்படுகிறது.